fbpx
Connect with us

Cinemapettai

சசிகலா முதல்வராகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது: கமல்

Politics | அரசியல்

சசிகலா முதல்வராகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது: கமல்

தன்னை நிர்பந்தித்தே ராஜினாமா கடிதம் வாங்கியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா முதல்வராவதில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், இப்போதிருக்கும் சூழ்நிலை மோசமான இறுதிக் காட்சி. சசிகலா முதல்வராகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது என்று கமல் கூறியுள்ளார்.

இது குறித்த அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இப்போது பன்னீர்செல்வத்தை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. முதல்வர் என்றா? முன்னாள் முதல்வர் என்றா? ஆனால் அவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர். அவர் மீது இப்போது எதுவும் குற்றம் சுமத்த இயலாது. ஏன் பன்னீர்செல்வம் சில காலம் முதல்வராக நீடிக்கக் கூடாது? அவர் சிறப்பாகவே பணியாற்றியுள்ளார். மக்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை நீக்கலாம்.

இப்போதிருக்கும் சூழ்நிலை மோசமான இறுதிக் காட்சி. சசிகலா முதல்வராகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது. நாம் ஆடுகள் அல்ல. நம்மை மேய்க்க வேண்டியதும் இல்லை. மக்கள் அளவுக்கதிகமாக நீண்ட நாட்களாக சகித்துக் கொண்டுவிட்டனர். அவர்கள் இன்னும் நிறைய நிர்பந்திக்க வேண்டும்” என்றார்.

ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று கூப்பிட்ட சிலர் இப்போது சசிகலாவை ‘சின்னம்மா’ என்று கூப்பிடுவது பற்றி கேட்ட போது, “இளம் இந்தியாவுக்கு காந்தியை பாபுஜி என்றும், நேருவை மாமாஜி என்றும் கூப்பிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் இப்போது நாம் வளர்ந்து விட்டோம்” என்றார்.

மேலும், “சசிகலாவிடத்தில் அதிக ஆதரவு இருப்பது என்னை ஈர்க்கவில்லை. தேசத்தை வழிநடத்துவது எப்படி என்று தெரியவில்லையென்றால் அவர்கள் அந்த இடத்தில் இருப்பதற்கு உரிமையில்லை. நான் யாருக்கும் தலைவன் அல்ல. தமிழக மக்களை ரசிப்பவன் மட்டுமே” என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மற்றொரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் மிகக் கவனமாகவே சொல்கிறேன். ஏனென்றால் அரசியலில் சில காலமாக இருக்கு வன்முறை கூட்டத்திடம் அந்த வார்த்தைகள் சிக்கிவிடக் கூடாது. நான் வன்முறைக்கு வித்திடுமாறு எந்தவிதமான கோபத்தையும் காட்டப் போவதில்லை.

பல வருடங்களாக இருக்கும் எனது கோபம் எரிச்சலாக மாறியுள்ளது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை 40 வருடங்களாக பார்த்து வருகிறேன். நான் எந்த ஒரு கட்சியையும் குற்றம்சாட்டவில்லை. தமிழக மக்கள் நிலையை உணர்ந்து, முன்னே வந்து, ”ஜனநாயகம் என்றால் என்ன என்று சொன்னீர்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அது கிடைக்கப்பெறவில்லை. எங்களுக்கு தலைவர்கள் தேவையில்லை. நாங்கள் ஆட்டுமந்தை அல்ல. எங்களை மேய்க்கவேண்டாம். எங்களைப் போல தேசத்துக்காக உழைக்கும் மக்கள் தான் எங்களுக்கு வேண்டும்” என சொல்ல வேண்டிய நேரம் இது.

பன்னீர்செல்வம் ஆதரவாளர் கூட்டத்துடன் நான் இணையப்போவதில்லை. கடைசியாக நான் அவரிடம் பேசியது ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது. அப்போது மக்களிடம் செல்லுங்கள் என்று தான் கூறினேன். மாநிலத்தை எப்படி நடத்த வேண்டும் என நாம் உணரவேண்டும்.

நான் ஓட்டு போடும்போது என் விரலில் கறை வைத்துக் கொள்கிறேன். கறை அவ்வளவு மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் அரசியல் சார்ந்தவன் அல்ல. நான் எனது கருத்தைக் கூறுகிறேன். எனக்கு அரசியல் சித்தாந்தங்கள் உள்ளன. நான் மக்களுக்கு எது நல்லது என்பதை ஆதரிக்கிறேன். ஏனென்றால் தங்களது தலைவரை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமையுள்ளது. நான் அவர்களில் ஒருவன். எனது வழியிலேயே மொத்தமும் இருக்க வேண்டும் என விரும்பவில்லை.

அரசியலில் அனைத்து விதமான ஊழலும் இருக்கின்றன. ஊழலின் திரள் அது. ஒரே ஒரு பெண்மணியை மட்டும் தனியாகக் குறிப்பிட வேண்டாம்.

இப்போது தேர்வு செய்யும் உரிமை நம்மிடம் உள்ளது. ஒரு முதல்வர் பதவியில் உள்ளார். அவரது ஆட்சியில் சேதம், அவரது திறமையின்மை என எதற்கும் இப்போதைக்கு அறிகுறிகள் இல்லை. இதுவரை சிறப்பாகவே பணியாற்றியுள்ளார். அடுத்து என்ன ஆகும் என நமக்குத் தெரியாது. உங்களது உறுதியின்மையை எங்கள் மீது திணிக்கவேண்டாம். அது கட்சியின் உறுதியின்மை.

பன்னீர்செல்வம் எனது நண்பரோ எதிரியோ அல்ல. எனது ஜனநாயக விருப்பத்தை நிறைவேற்ற அவர் ஒரு கருவி. தேவையென்றால் அவரைவிட கூர்மையான ஒரு கருவியை நாம் தேர்ந்தெடுக்கலாம். அதுதான் நாம் செல்ல வேண்டிய பாதை. சமநிலை என்ற போர்வையில் தேய்ந்துபோன கருவிகளைப் பெற்று மீண்டும் கற்காலத்துக்கே போகவேண்டியதில்லை.

பன்னீர்செல்வம், சசிகலா இருவர் மீதும் எனக்கு சில விமர்சனங்கள் உள்ளன. ஆனால் பன்னீர்செல்வம் தனது திறனை நிரூபித்துள்ளார். அவருக்கு திறனில்லை எனும்போது நாம் அவரை நீக்குவோம். அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தே.

நான் எனது விருப்பத்தைத் திணிக்க முடியாது. நான் நினைத்ததைப் பேசலாம் ஆனால் திணிக்க முடியாது. என் பக்கம் தவறு என நிரூபிக்கலாம் ஆனால் நான் பேசியாகவேண்டும். 60 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்துக்கு அரசியல்வாதிகளிடமிருந்து சிறந்த சேவை ஏதும் கிடைக்கப்பெறவில்லை. முதல் 10 வருடங்கள் பொற்காலமாக இருந்தது. ஆனால் காங்கிரஸ், காமராஜர், ராஜாஜி என மெத்தனமானது. அடுத்து திராவிடக் கட்சிகள் வந்தன. அவர்கள் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top