அண்மையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமலின் சிறப்பு நேர்காணல் ஒளிபரப்பானது. கமல், மனம் திறந்து பேசிய இந்தப் பேட்டியில், தங்கள் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக இந்து அமைப்புகள் சில, போராட்டங்களில் இறங்கின. நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், ‘கடந்த மார்ச் 12-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார்.

அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் முன்பு ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்டதையொட்டி ‘மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக’ கமல் மீது வழக்கு தொடரப்பட்டது. கமல் மீதான புகாரை விசாரித்து, இது தொடர்பாக பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் இந்த வழக்கையொட்டி மே -5 ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு வேறு பிறப்பிக்கப்பட்டது.

கமல் ஒரு சந்தர்ப்பவாதி!

மகாபாரத விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே கமலுக்கு குடைச்சல் கொடுத்து வந்தது இந்து மக்கள் கட்சி. நான், அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் இதுகுறித்துப் பேசினேன். அப்போது,

”கமலுக்கு இதுவே வேலையாகப் போய்விட்டது. தான் ஒரு பெரிய நடிகர், தான் பேசும் கருத்துகள் சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பது கூடவா அவருக்கு தெரியாது? தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவே பேசிவருகிறாரே… ‘மன்மதன் அம்பு’ படத்தில் ரங்கநாதர் படுத்துக்கொண்டிருக்கிறார் என ஆபாச அர்த்தம் பொதியும் வகையில் பாடல் எழுதினார். வெளியில் பார்த்தால் தசாவதாரம், பாபநாசம், விஸ்வரூபம் என்று இந்து தலைப்புகளாக வைத்துக்கொள்வார். ஆனால், உள்ளே இந்துக்களை, இந்து ஆன்மிகக் கடவுள்களை கேலி செய்வது, கிண்டல் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுவார். திடீரென சில சமயம் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவார்.

கமல் நல்லவரா இருப்பார். ‘மகாநதி’ படத்தில் கூட ‘ஸ்ரீ ரங்கநாதனின் பாதம்…’ என்று புகழப்படும் பாடல் இருக்கும். இப்படி இந்து மதத்தை காப்பாத்துற வேலையையும் அப்பப்போ செய்வார். மோடி அரசாங்கத்தின் கலாச்சார தூதராகவும் இருக்கிறார். ஆனால், மீண்டும் இந்து மதத்தை கேலி செய்வார். அவர் அடிக்கடி மாறும் சந்தர்ப்பவாதி. விஸ்வரூபம் படத்தில் ஆப்கான் தீவிரவாதம் பற்றியெல்லாம் எடுத்தார். அந்த படத்துக்கு நாங்களும் ஆதரவு தந்தோம். ஆனால், கமல் என்ன செய்தார்? ‘நாட்டை விட்டே ஓடிப்போகிறேன்’ என்றார். மன்னிப்பு கேட்டார். காட்சிகளை மாற்றினார். முஸ்லிம்கள் போராடினால் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், இந்துக்களை மட்டும் புண்படுத்துவாரா? தசாவதாரத்தில் பத்து கதாபாத்திரத்தில் ஒருவர் முஸ்லிம். அந்த ஒரு முஸ்லிம், சுனாமியின்போது எல்லோரையும் மசூதியில் கொண்டு போய் வைத்து காப்பாற்றுவதாகக் காட்டினார்.

அதே கமல், இந்துக்கள் என்றால் வில்லனாகக் காட்டுவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார். ‘அன்பே சிவம்’ படத்தில், சிவனடியாரை வில்லனாகக் காட்டினார். இந்த முற்போக்கு முகமூடியெல்லாம் முஸ்லிம்களிடம் எடுபடுமா? ஏன் இந்துக்களிடம் காட்டுகிறார்? அவர் ஒரு பிராமணர். அதனால் திராவிட ஆட்சியில் தன்னுடைய நலனுக்காக வலிந்து கருப்பு சட்டை போடுறாரு. உண்மையில் அவர் பயப்படுபவர். துணிச்சல்காரரில்லை. அவர் ஒரு சந்தர்ப்பவாதி. பெண் வைத்து சூதாடியது தவறு என்று சொல்வதுதான் மகாபாரத நீதி. அது இந்துக்களின் ஐந்தாம் வேதம். பெண்ணின் மானம் காப்பதுதான் மகாபாரதம். தற்போது அவர் வழக்கில் இருந்து இடைக்கால விலக்கு பெற்றுள்ளார். நாங்கள் இதையொட்டி சட்டப்போராட்டம் நடத்துவோம். இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் கமலுக்கு ஒருமுறையாவது தண்டனை வாங்கித்தராமல் விடமாட்டோம்” என்றார் உணர்ச்சிப்பூர்வமாக.