indian

1996ம் ஆண்டு தமிழ், இந்தியில் வெளிவந்த ‘இந்தியன்’ திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கமல், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில், பாலாசிங், நெடுமுடி வேணு, கஸ்தூரி, கிரேஸிமோகன், மனோரமா, நிழல்கள் ரவி, சொக்கலிங்க பாகவதர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களைத்தொடர்ந்து தன் மூன்றாவது படமாக ஷங்கர் இயக்கிய இந்தப்படம் அவருக்கும் அடுத்தகட்டமாக அமைந்தது. ரஹ்மானின் இசையில் வாலியும் வைரமுத்துவும் பாடல்கள் எழுதினர். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.

இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப்பிறகு அதன் அடுத்த பாகத்தை தில் ராஜு தயாரிப்பில் எடுக்க உள்ளதாகக் கமலும் ஷங்கரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட்டாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து, ‘‘இந்தியன்’ படத்தின் கதை அடுத்த பாகத்தில் எப்படித் தொடரும்’ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. லஞ்சம், ஊழலை ஒழிக்க ஒரு சுதந்திரப்போராட்ட வீரர் கத்தியை எடுப்பதுதான் ‘இந்தியன்’ படத்தின் கதை.

கடைசியில் தன் மகனைக் குத்திக்கொன்றுவிட்டு இந்தியன் தாத்தா எப்படித் தப்பிக்கிறார் என்று கதை முடியும்.அப்படித் தப்பிக்கும் இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார் என்பதாகத்தான் அடுத்தபாகத்தின் கதை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில் ‘இந்தியன்’ படத்தில் அந்த தாத்தா கேரக்டர்தான் ஸ்பெஷல். அதனால் அதை கண்டிப்பாக மிஸ் பண்ண மாட்டார்கள். அப்படித் தப்பிக்கும் தாத்தா 21 வருடங்களுக்குப் பிறகு திரும்பி வருகிறார் என்று கதை இருக்கலாம்.

ஏனெனில் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கமல் பேசிவரும் இன்றைய அரசியல் சூழலுடன் கனெக்ட் செய்யும் வகையில் இருந்தால்தான் படம் பெரிய அளவில் பேசப்படும். அதனால் நிச்சயம் இந்த இந்தியன் தாத்தா, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக தன் வர்மக் கலையைப் பயன்படுத்துவார் என்று நம்புவோம்.

இதுதவிர, இந்த இந்தியன்-2’வில் யாரெல்லாம் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களில் மனோரமா, சொக்கலிங்க பாகவதர், ஓமக்குச்சி நரசிம்மன் உள்பட சிலர் இறந்துவிட்டனர்.

மேலும் கதைப்படி மகன் சந்துரு கமலும், மகள் கஸ்தூரி கதாபாத்திரங்களும் இறந்துவிடுவதால் மீண்டுவர வாய்ப்பு இல்லை. இந்தியன் தாத்தாவின் மனைவியாக நடித்த சுகன்யாவே அடுத்த பாகத்திலும் நடிப்பாரா? கவுண்டமணி, செந்தில் போன்றோர் ‘இந்தியன் 2’லும் தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கில் வர, ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ரிலிஸாகவுள்ளது, இதற்கான வேலைகளில் விரைவில் ஷங்கர் இறங்கவுள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் தற்போது வெளிவந்துள்ளது, சுமார் ரூ 150 கோடி வரை இப்படத்தின் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளனர்.

மேலும், 3 வருடத்திற்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தியன் முதல் பாகம் 3.5 கோடி மதிப்பில் உருவானது என்பது குறிப்பிடதக்கது.