அன்று கமலை எதிர்த்தவர்கள்.. இன்று முகேஷ் அம்பானிக்கு வாயை திறக்கவில்லை

டெல்லி: நடிகர் கமல்ஹாசன் சில ஆண்டுக்கு முன்பு வீடு தேடி படம் என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இன்றைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பெரிய அளவில் இதே திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த எதிர்ப்பும் எழவில்லை.

நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ஜியோஃபைபர் அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்குகிறது.

ஜியோஃபைபர் மூலம் வீடுகளுக்கு 4கே டீவியும், ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸும் வழங்கப்படும். ஜியோஃபைபர் இணைப்பை பெறுபவர்களின் வீடுகளுக்கு ஜியோஃபைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்படும். இந்த ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் உங்கள் கேபிளுக்கு மாற்றாக செயல்படும்.

அதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களுடன் இவர்கள் செய்ய உள்ள ஒப்பந்தம் காரணமாக அவர்களின் ஷோக்களை பணம் கொடுக்காமல் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்சில் பார்க்க முடியும்.

ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் உங்கள் லோக்கல் கேபிள் சேனல்களை பார்க்க முடியும். அதேபோல் இதில் இன்னொரு முக்கியமான அம்சம் புதிய படங்கள் தியேட்டரில் வந்த அதே நாளில் நீங்கள் அதை ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் டீவியில் அந்த படத்தை பார்க்க முடியும். ஆனால் இதற்கு 2020 மே வரை காத்திருக்க வேண்டும். காசு தர வேண்டியது இல்லை. மாத சந்தாவில் இது அடங்கும்.

அதாவது ஜியோஃபைபர் கேபிள் மூலம் படம் உங்கள் வீட்டு டீவிக்கே வரும். அதுவும் தியேட்டரில் ரிலீஸ் ஆன அதே தேதியில் உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். இந்ததிட்டத்தால் இந்தியாவில் தியேட்டர் என்பது பெரிய அளவில் குறையும்.

இதே திட்டத்தைத்தான் கமல்ஹாசன் தசாவதாரம் வெளியான போதும் குறிப்பிட்டார். டிடிஹெச் மூலம் விஸ்வரூபம் படத்தை வெளியிட 2013ல் அவர் திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்களின் சங்கம் களமிறங்கி போராட்டம் செய்தது. இதனால் அந்த திட்டத்தை கமல்ஹாசன் அப்போது கைவிட்டார். இப்போதே அதே திட்டத்தை முகேஷ் அம்பானி பெரிய அளவில் நாடு முழுக்க செயல்படுத்த உள்ளார் ஆனால் யாரும் எதிர்கவில்லை.

Leave a Comment