கடன் இல்லை என்றால் சினிமாவை விட்டு போயிருப்பேன்.. பலநாள் கேள்விக்கு கமல் அளித்த பதில்

தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு நடிப்பு, இயக்கம் போன்ற பன்முக திறமை கொண்டவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது அரசியல், நிகழ்ச்சி தொகுப்பு, நடிப்பு என்று படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்கள் தாண்டி தற்போது 5வது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் கமல்ஹாசனின் அணுகுமுறையும், பேச்சுத் திறமையும் ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது. இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி தொகுப்பு தவிர விளம்பர படங்களில் நடிப்பதற்கும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். போத்தீஸ் நிறுவனத்திற்காக இவர் நடித்த விளம்பரம் ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு மட்டுமே அவருக்கு பல கோடி சம்பளம் வழங்கப்பட்டது.

தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் கமல் மக்களுக்கு சேவை செய்வது மட்டுமே என்னுடைய நோக்கம் என்று கூறி வருகிறார். மேலும் இதற்காக நான் என்னுடைய தொழிலான நடிப்பில் நிறைய சம்பாதித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மக்களுக்கு செலவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு கோடி சம்பாதித்தாலும் எனக்கு கடன் நெருக்கடி நிறைய இருக்கிறது என்று கூறும் கமலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது விளம்பரப் படங்கள், திரைப்படங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி இதன் மூலம் பல கோடி சம்பாதிக்கும் உங்களுக்கு எப்படி கடன் நெருக்கடி இருக்க முடியும் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் எனக்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது, கடன் இல்லை என்றால் நான் சினிமாவை விட்டு விலகி இருப்பேன். இது தவிர நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்கிறேன் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் இனி அப்படி யாரும் சொல்ல முடியாது.

ஏனென்றால் இப்போது நான் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் மட்டுமல்லாமல், மக்களை நோக்கியும் செலவு செய்கிறேன். ஆனால் அது தேர்தலின்போது மூட்டை மூட்டையாக கட்டி செய்யும் செலவு அல்ல. நியாயமான முறையில் என்னால் என்ன முடியுமோ அதை நான் மக்களுக்கு செய்கிறேன்.

நடிப்பு என்பது என்னுடைய தொழில், ஆனால் அரசியல் என்பது நம் கடமை, அரசியல் தொழிலாக கூடாது. அப்படி நடிப்பின் மூலம் நான் சம்பாதிக்கும் பணத்தில் நானும் வாழ்ந்து, மக்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்று அவர் தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்