விஸ்வரூப ஆட்டத்தை ஆரம்பித்த ஆண்டவர்.. விக்ரம் ட்ரைலர் எப்படியிருக்கு?

தமிழ் ரசிகர்கள் பல மாதங்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போயிருக்கின்றனர். கைதி, மாஸ்டர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லோகேஷ் கனகராஜ் இந்த டிரைலரின் மூலம் அனைவரையும் வாயடைக்க செய்துள்ளார்.

பல ட்விஸ்ட்களை உள்ளடக்கி வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரின் எடிட்டிங் பலரையும் வியக்க வைத்துள்ளது. அந்த வகையில் கமலின் அட்டகாசமான குரலில் ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் வியக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள், துப்பாக்கி சூடு என்று மிரட்டலாக இருக்கிறது.

அதிலும் கமல் சிங்கம், புலி என்று சொல்லும்போது காட்டப்படும் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் வரும் காட்சிகள் இருவரும் எந்த மாதிரியான கேரக்டர்கள் என்பதை யூகிக்க முடிகிறது. அதைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கிறது.

மேலும் கைதி திரைப்படத்தில் வருவது போன்று பிரியாணி, மிஷின் கன் போன்ற காட்சிகளையும் இதில் பார்க்க முடிகிறது. இதுதவிர நடிகர் சூர்யா இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் ஒரு காட்சியில் சூர்யாவும் வருகிறார்.

அதை தொடர்ந்து முகத்தில் ரௌத்திரம் பொங்க இரு கைகளிலும் துப்பாக்கியை வைத்து சண்டையிடும் கமலைப் பார்க்கும் போது உங்களுக்கு வயசு ஆகல என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்தில் கமலின் குரலை காட்டியது போன்று இறுதியிலும் அவர் விக்ரம் என்று உரக்க கத்துவதோடு முடிகிறது.

சமீபகாலமாக தமிழ் திரையுலகில் வெளிவரும் திரைப்படங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கமலின் விஸ்வரூப ஆட்டமாக வெளிவர இருக்கும் இந்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தும் என்றே தெரிகிறது. அதனால் இப்படம் கமலுக்கு நிச்சயம் ஒரு கம்பேக்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இந்த ட்ரைலர் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Next Story

- Advertisement -