கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரமுகர்கள் சிலரால் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வந்த விஷயம்தான்… இன்று டமால் என்று வெடித்துவிட்டது! கமல் கவுதமியின் நட்பு, அல்லது காதல், அல்லது குடும்ப வாழ்க்கை, இன்று முடிவுக்கு வந்துவிட்டது. கவுதமியே இன்று அதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.

“13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதை கருதுகிறேன்” என்று அவர் கூறியிருப்பது ஏராளமான புதிர்களுக்கு வழி வகுத்துள்ளது. ஒருவேளை கமல் முன் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, “திரும்ப வா…” என்று அழைத்தால் போய் விடுவாரோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது கவுதமியின் விளக்கம். ஆனால் அதற்கெல்லாம் இனி வழியில்லை என்றே கூறுகிறார்கள் சினிமாவுலகத்தில்.

கமலின் மூத்த மகள் ஸ்ருதிக்கும், கவுதமிக்கும் ஒத்து வராமல் போய்விட்டதுதான் இந்த பிரிவுக்கான முதல் காரணம். சென்னையில் இருந்தாலும், கமலுடன் சேர்ந்து இருக்கவில்லை ஸ்ருதி. அம்மா சரிகாவுடன் சில நாட்களும், சென்னைக்கு வந்தால் தனி வீட்டிலும்தான் இருக்கிறார் அவர். அப்பா கமல்ஹாசனை பார்க்க போக வேண்டும் என்றால் கூட, முன் அனுமதி பெற்ற பின்பே செல்லக் கூடிய நிலை இருக்கிறதாம் ஸ்ருதிக்கு.

இது ஒருபுறமிருக்க, கவுதமியின் சொத்துக்கள் அனைத்தும் கமல் வசமே இருந்து வந்ததாம். அவற்றை மீட்கும் பொருட்டே அவர் கமலுடன் இவ்வளவு காலம் குடித்தனம் நடத்தியதாகவும் கூறுகிறார்கள் திரையுலகத்தில். கவுதமியின் மகளான சுப்புலட்சுமியை சினிமாவுக்கு கொண்டு வருகிற விஷயத்தில் கமலுக்கும் கவுதமிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பும் இன்னொரு காரணம் என்று கூறுகிறார்கள்.

கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்தார் கவுதமி. ஏதோ மத்திய அரசின் சலுகைக்காகவோ, அல்லது ராஜ்ய சபை எம்.பி மாதிரியான ஏதோவொரு பதவிக்காகவோ அவரை சந்தித்திருப்பார் என்று கருதிய அத்தனை பேரும் இப்போது கப்சிப். ஏனென்றால், சொத்து விவகாரம் தவிர வேறு எதற்கும் அவர் அவ்வளவு பெரிய இடத்தில் கதவை தட்ட வேண்டிய அவசியம் இருந்திருக்கப் போவதில்லை.

இப்போதைக்கு நாகரீகமாக வெளிப்பட்டிருக்கும் இந்த பிரச்சனை, போக போக ‘விஸ்வரூபம்’ எடுத்து இன்னொரு முகம் காட்டலாம். அதற்குள் கமல் சுதாரித்துக் கொள்வது அவரது இமேஜூக்கு நல்லது!