புதுமுகம் நெல்சன் இயக்கத்தில் டைட்டில் ரோலில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் இருந்து எதுவரையோ, கல்யாண வயசு என இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கல்யாண வயசு பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட்டடித்திருக்கிறது. போதாக்குறைக்கு யூடியூப் ட்ரெண்டிலும் கல்யாண வயசு பாடல் கலக்கி வருகிறது.

எதுவரையோ பாடலில் இயக்குநர் கௌதம் மேனனின் குரல் அட்ராக்‌ஷன் என்றா, கல்யாண வயசு பாடல் சிவகார்த்திகேயன் ஸ்பெஷல். ஆமாங்க… இந்த பாடல் மூலம் பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் அறிமுகமாகிறார். இந்த டெம்போவும் ரசிகர்களிடையே பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணி மட்டுமில்லாமல், இந்த பாடலில் நயன்தாரா – யோகி பாபு ரொமான்ஸ் சீக்வென்ஸூம் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. லிரிக் வீடியோவாக இல்லாமல், மொத்த பாடலையும் வீடியோவாக வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்த்துள்ளது.

Yogi-Babu

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா குடும்பச் சூழல் காரணமாக போதை மருந்து கடத்தும் தொழிலில் ஈடுபடுகிறார். போதை மருந்தைக் குறிக்கும் வகையிலேயே கோலமாவு என்ற பெயர் தலைப்பில் இடம்பிடித்துள்ளது. இந்த படத்தில் நயனுக்கு ஜோடி கிடையாது. ஆனால், நயன்தாரா வசிக்கும் தெருவில் மளிகைக் கடை நடத்து யோகி பாபு, அவரை ஒன்சைடாகக் காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒன்சைட் லவ்வராக நயன் பின்னால் யோகி பாபு அலையும் வகையில் உருவாகி இருக்கும் கல்யாண வயசு பாடல், லிரிக்கலாகவும் பேசப்படும் பாடலாக மாறியிருக்கிறது. இதனால், நெல்சன், அனிருத், யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் செம்ம ஹேப்பி அண்ணாச்சி.

Vijay

இதுகுறித்து பேசியுள்ள யோகி பாபு, கல்யாண வயசு பாடல் யூ டியூப்ல முதல் இடத்துல இருக்குனு சொல்றாங்க. இதுக்கெல்லாம் காரணம் டைரக்டர் நெல்சனும், இசையமைப்பாளர் அனிருத்தும்தான். நெல்சன் சொன்னபடியே அப்படியே செஞ்சேன். முழு வீடியோவையும் பார்த்த போது நாமளா இப்படி நடிச்சிருக்கோம்னு எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. நயன்தாரா எவ்வளவு பெரிய நடிகை, அவங்க என்னை காமெடியனா பார்க்கமா, சக நடிகரா பார்த்தாங்க. அதனால தான் இந்த பாட்டு சாத்தியமாச்சு. சமீபத்தில் விஜய் சார் கூட ஷூட்டிங் நடந்துச்சு. அப்போ இந்த பாட்டை அவர் கிட்ட பாடிக் காண்பிச்சேன். ரொம்ப சூப்பர்னு சொல்லி பயங்கரமா என்ஜாய் பண்ணி சிரிச்சார். நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்னு சொன்னார். அஜித் சார் கூட ஷூட்டிங் போறப்ப அவர்கிட்டயும் பாடிக் காண்பிக்கணும் என்றார் மகிழ்ச்சியுடன்.