இளம் பாடலாசிரியர் முத்துகுமாரின் மறைவு திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் அவரது குடும்பத்தினர்களின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரம் குறித்து பலர் கவலைகளை தெரிவித்துள்ளனர். முத்துகுமாரின் சகோதரர் தனது சகோதரருக்கு எவ்வித பொருளாதார பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார் என்று கூறப்படினும், முத்துகுமாரிடம் ஏராளமான பவுன்ஸ் ஆன செக்குகள் உள்ளதாம்.

பல தயாரிப்பாளர்கள் முத்துகுமாருக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு செக் கொடுத்துவிட்டு வங்கியில் பணம் போடாமல் இருந்ததால் முத்துகுமாரிடம் கட்டுக்கட்டாக பவுன்ஸ் ஆன செக்குகள் இருப்பதாகவும் இதுகுறித்து முத்துகுமார் எந்த தயாரிப்பாளரிடம் எந்த விளக்கமும் கேட்டதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்துகுமார் குடும்பத்தினர்களை சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறிய கலைப்புலி எஸ்.தாணு, முத்துகுமாரின் குடும்பத்தினர் பவுன்ஸ் ஆன செக்குகள் குறித்த தகவல்களை தன்னிடம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பணத்தை வாங்கித்தர தான் உதவியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தாணுவின் இந்த உதவி முத்துகுமாரின் குடும்பத்துக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.