Connect with us
Cinemapettai

Cinemapettai

‘காலா’ ரஜினி ‘கபாலி’ ரஜினிக்கும் ரெண்டே வித்தியாசம் தான் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் ஓபன் டாக்..!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘காலா’ ரஜினி ‘கபாலி’ ரஜினிக்கும் ரெண்டே வித்தியாசம் தான் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் ஓபன் டாக்..!

இது, தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டன்ட் யூனியனுக்கு பொன்விழா ஆண்டு. இதை, கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடியது ஸ்டன்ட் யூனியன். ரஜினிகாந்த், மோகன்லால், பாலகிருஷ்ணா, இயக்குநர் ஷங்கர் உள்பட தென்னிந்தியாவின் முக்கியமான மூத்த சினிமா கலைஞர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழாவில் ஸ்டன்ட் யூனியன் கடந்து வந்த பாதை குறித்து திரையிடப்பட்ட ஆவணப்படம் அனைவரையும் கவர்ந்தது. எத்தனை எத்தனை ஸ்டன்ட் இயக்குநர்கள், ஸ்டன்ட் கலைஞர்களின் கடும் உழைப்பால் சண்டைக்காட்சிகள் உருவாகின்றன என்பதை விளக்கியது அந்த ஆவணப்படம்.

ஸ்டன்ட் யூனியனின் இந்தப் பொன்விழா சமயத்தில், தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருக்கும் ஸ்டன்ட் டைரக்டர்கள் சிலரைச் சந்தித்துப் பேசலாம் என்பது திட்டம். ‘மெட்ராஸ்’, ‘இருமுகன்’, ‘கபாலி’, `மாநகரம்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்த இரட்டைச் சகோதரர்களான அன்பறிவைச் சந்தித்தோம்.”அன்புமணி, அறிவுமணி. இந்த ரெண்டு பெயர்களின் சுருக்கம்தான் ‘அன்பறிவ்’. நாங்க ட்வின்ஸ். சென்னைதான் எங்களுக்கு சொந்த ஊர். அம்மா ஸ்கூல் டீச்சர்; அப்பா பேங்க் எம்ப்ளாயி. நாங்க நல்லா படிக்கணும்னு எதிர்பார்த்தாங்க. ஸ்கூலுக்குப் போக வடபழநி ஏரியாவை க்ராஸ் பண்ணும்போது, ஸ்டன்ட் கலைஞர்கள் பயிற்சி செய்றதை தினமும் பார்ப்போம். அப்படியே யூனிஃபாமைக் கழட்டிப்போட்டுட்டு நாமளும் அவங்களோடு ஸ்டன்ட் பண்ணலாமானு ஆசையா இருக்கும்.
ஸ்கூலிங் முடிச்சுட்டு, வீட்ல எங்க விருப்பத்தைச் சொன்னோம். ஆரம்பத்துல சம்மதிக்கலை. காலேஜ் படிக்கச் சொன்னாங்க. அவங்களுக்காக காலேஜில் சேர்ந்தோம். ஆனால், சினிமா ஆசையையும் படிப்பையும் எங்களால பேலன்ஸ் பண்ணிப் படிக்க முடியலை. படிப்பைப் பாதியில் நிறுத்திட்டு, ஸ்டன்ட் பயிற்சிக்குப் போறதுனு முடிவுபண்ணினோம். மணிகண்டன்னு எங்க உறவுக்காரர் ஒருத்தர், ஸ்டன்ட் கலைஞரா இருந்தார். அவர்கிட்ட நாங்க பயிற்சிக்குப் போக ஆரம்பிச்சோம். முதலில், எங்களை ஜிம்னாஸ்டிக் கத்துக்கச் சொன்னார். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, போகக்போக எல்லா பயிற்சிகளும் எளிதா பண்ண ஆரம்பிச்சோம்” தங்களின் ஆரம்பத்தை அவ்வளவு ஆர்வமாகச் சொல்கிறார் அன்புமணி.

அவரைத் தொடர்ந்த அறிவுமணி, தங்களின் ஃபைட் பயணத்தைப் பற்றிப் பேசுகிறார். “ஆரம்பத்தில் ஸ்டன்ட் சிவா, பீட்டர் ஹெயின் மாஸ்டர்கள்கிட்ட தெலுங்கு, மலையாளப் படங்கள்ல அசிஸ்டென்ட்டா வேலை செய்ய ஆரம்பிச்சோம். பிறகு, அனல் அரசு மாஸ்டர் பண்ணும் தமிழ்ப் படங்கள்ல அசிஸ்டென்ட்டா இருந்தோம். பெரிய ஹீரோக்களுக்கு டூப் போடுவோம். இப்படி அனல் அரசு மாஸ்டர்கிட்ட ஃபைட்டரா நாலு வருஷங்கள் வொர்க் பண்ணினோம்.அப்படியே ‘அன்வர்’னு ஒரு மலையாளப் படத்துக்கு அனல் அரசு மாஸ்டர்கிட்ட வொர்க் பண்ணிட்டிருந்தோம். அப்ப நாங்க பண்ற ஃபைட் சீக்வென்ஸைப் பார்த்துட்டு அந்தப் பட இயக்குநர் அமல் எங்களைக் கூப்பிட்டு பேசினார். “நான் அடுத்து `பேச்சுலர் பார்ட்டி’னு ஒரு படம் இயக்குறேன். அதுக்கு நீங்கதான் மாஸ்டர்”னு சொன்னார். அதுதான் நாங்க மாஸ்டரா வொர்க் பண்ணின முதல் படம். எங்கள் முதல் படத்துலேயே ப்ருத்விராஜ், இந்திரஜித், கலாபவன் மணி, ஆஷிப் அலி, ரகுமான் என ஐந்து ஹீரோக்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் கிட்டத்தட்ட 30 படங்கள் செய்தோம். நல்ல பெயரும் நிறைய பணமும் சம்பாதிச்சோம்” அறிவுவின் முகத்தில் அப்படியொரு நிதானம்.
rajinikanth kaalan
தமிழில் முதல் பட வாய்ப்பு கிடைத்தது பற்றிச் சொல்கிறார் அன்பு. “ஒருகட்டத்தில் ‘நாம தமிழ் சினிமாவுக்குப் போகலாம்’னு தோன்றியது. ‘மற்ற மொழிப் படங்களை பணத்துக்காகப் பண்ணினோம். தமிழ்ல நல்ல பேர் கிடைக்க பண்றோம். நல்ல படம் வர்ற வரை காத்திருப்போம்’னு நினைச்சோம். அந்த நேரத்துல நண்பரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளருமான சங்கர் சாருக்கு போன் பண்ணிப் பேசிட்டிருந்தோம். `மாஸ்டர் ஆகிட்டீங்களா? சொல்லவே இல்லை. சூப்பர். நம்ம கம்பெனிக்கு ஒரு டைரக்டர் படம் பண்ணப்போறார். அவரை வந்து பாருங்க’னு சொன்னார். அப்படித்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சாரைப் பார்த்தோம். நாங்க பண்ணின மலையாளப் படங்களின் க்ளீப்பிங்ஸைப் பார்த்தார். பிறகு, டைரக்டரைப் பார்க்கச் சொன்னார். அப்போது வரை அந்தப் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்கிறது எங்களுக்குத் தெரியாது.
அதுக்கு ஆறு மாசங்களுக்கு முன்னாடிதான் `அட்டகத்தி’ ரிலீஸான நேரம். அப்ப பா.இரஞ்சித் சாரைச் சந்திச்சோம். அவர் தன் அடுத்த பட வேலைகள்ல இருந்தார். ‘உங்க படங்களின் ஸ்டன்ட் க்ளிப்பிங்ஸைக் கொடுங்க’னு கேட்டார். `இவரே இப்பதான் ஒரு படம் முடிச்சிருக்கார். இவர் பின்னால நாம போனா சரியா இருக்குமா?’ங்கிற யோசனையில ‘க்ளிப்பிங்ஸ் தர்றோம்’னு சொல்லிட்டு வந்துட்டோம்.

அந்தச் சம்பவம் நடந்து ஆறு மாசங்கள் கழிச்சு, ஸ்டுடியோ கிரீன் ஆபீஸில் பா.இரஞ்சித் சாரைப் பார்த்தப்ப, செம ஷாக். `சூப்பர் பாஸ், எப்படியோ ஃபாலோ பண்ணி வந்துட்டீங்க’னு சொன்னார். பிறகு, `மெட்ராஸ்’ பட ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தார். 5 மணி நேரம் படித்தோம். அதில் 36 சந்தேகங்களை மார்க் பண்ணி, அவர்கிட்ட க்ளியர் பண்ணிக்கிட்டோம். அப்படித்தான் `மெட்ராஸ்’ திரைப்படம் தொடங்குச்சு. அதுக்குப் பிறகு நிறைய வெற்றிப் படங்கள்ல நாங்க வொர்க் பண்ணினோம், பண்ணிட்டிருக்கோம்” என்றவர் சினிமா சண்டைக்காட்சிகளில் உள்ள ரிஸ்க் பற்றியும் `காவலன்’ ஃபைட் சீக்வென்ஸில் தனக்கு ஏற்பட்ட விபத்து பற்றியும் சொல்கிறார்.”இது, ரொம்பவே ரிஸ்கான வேலைதான். வியர்வையைவிட ரத்தம் சிந்துவதுதான் இங்கே அதிகம். ஆனாலும் அதை நாங்க ரசிச்சு செய்றோம். எங்க உடம்பில் இருக்கும் தையல்கள்தான் எங்களுக்கான கீரிடங்கள். அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஒரு சண்டைக்காட்சி முடிச்சதும் சுற்றி இருக்கிறவங்க எல்லாரும் நம்மை ஹீரோவா பார்ப்பாங்க. மற்ற நேரத்தில் ஜூஸ் கேட்டால்கூட யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா, ஒரு ஃபைட் சீன் எடுத்து முடிச்சா, கேட்காமலே எல்லாம் கிடைக்கும்.

`காவலன்’ பட க்ளைமாக்ஸ் காட்சி. மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சண்டை போடுற ரிஸ்கான காட்சி. ஆனா, மாஸ்டர் என்கிட்ட கேட்டதும் நான் `ஓகே’னு சொல்லிட்டேன். அந்தச் சண்டைக்காட்சியில் மேலே இருந்து கீழே குதித்ததில் கையில் அடிபட்டு பெரிய காயம். ரத்தம் கொட்டுது. உடனே என்னை கார்ல ஏற்றி மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனாங்க. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழிச்சு ஹாஸ்பிட்டல் போய்ச் சேர்ந்தோம். அங்கே டாக்டர் ஊசி எடுத்துக் குத்தினால் ஊசியே வளையுது! ஏன்னா, கார்ல வரும்போது அடிப்பட்ட இடத்துல ஐஸ்கட்டி வெச்சதால அந்த இடமே மரத்துப்போயிடுச்சு. டாக்டர் ட்ரீட்மென்ட் பண்றதுக்குள்ள ஒருவழியாகிட்டார்.

கைக்குள்ள போன கண்ணாடித் துண்டுகளை எடுத்துட்டு கட்டுப்போட்டுட்டு வந்து மறுபடியும் விஜய் சாருடன் அந்த ஃபைட் சீனை கன்டினியூ பண்ணினேன். அதெல்லாம் மறக்க முடியாத நாள்கள். விஜய் சாருடன் ஃபைட் சீக்வென்ஸ் பண்ணும்போது ரொம்ப நல்லா இருக்கும். ஏன்னா, அவர் பெர்ஃபெக்டா நடிப்பார். எதிராளி மீது அடி விழாமல் அடிப்பார். ஆனா, ஒரிஜினலா அடி விழுந்த மாதிரி இருக்கும். சில ஹீரோக்கள் கொஞ்சம் எமோஷனல் ஆகி உண்மையாவே அடிச்சிடுவாங்க. அதனால பலருக்கும் பல் தெறிச்சுடும்; வாய் கிழிஞ்சுடும். எங்ககிட்ட அசிஸ்டென்டா இருக்கிற பசங்களுக்கு எந்த அடியும் படமால இருக்கணும்கிறதுல ரொம்ப கவனமா இருப்போம்.

விஜய், அஜித் இருவரும் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. இப்படி ஹீரோக்கள் கொடுக்கும் மரியாதைதான் எங்களுக்கான எனர்ஜி டானிக்” என்கிற அன்புவின் வார்த்தைகளை ஆமோதிக்கிறார் அறிவு.”இருவரின் உருவ ஒற்றுமையும் ஒரேமாதிரி உள்ளது. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாராவது குழம்பி இருக்கிறார்களா?” என்றால் இருவரும் சிரிக்கிறார்கள்.”எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் யாராவது குழம்பிக்கிட்டுதான் இருப்பாங்க” என்கிற அன்பு, “ஒரு சண்டைக்காட்சி கம்போஸிங் பண்ணிட்டு இருக்கும்போது ஏதாவது போன்கால் வந்தா பேச ஓரமா தள்ளிபோய் நிப்பேன். அப்ப நான்விட்ட பாதியிலிருந்து அந்த வேலையை செய்ய அறிவு அங்க வந்திருப்பார். ‘இப்பதான் போன் பேசணும்னு போனீங்க. அதுக்குள்ள பேசிட்டீங்களா?’னு எல்லாரும் குழம்பிடுவாங்க.’கபாலி’ ஷீட்டிங் ஸ்பாட்டில்கூட இப்படி ஒரு விஷயம் நடந்தது. ரஜினி சாருக்கு நான் க்ளைமாக்ஸ் சீன் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தேன். ‘ரொம்ப ஃபாஸ்டா கன் எடுத்து சுடுவாங்க. இப்படி மூவ் பண்ணி மூவ் பண்ணி நீங்க தப்பிக்கணும்’னு அவர்ட்ட சொல்லிட்டு இருந்தேன். அப்ப ரஜினி சார், ‘ஏன் அப்படிப் போகணும்’னு சந்தேகங்கள் கேட்டுட்டு இருந்தார். அப்ப எனக்கு திடீர்னு ஒரு முக்கியமான போன்கால். சார்கிட்ட சொல்லிட்டு ஓரமா நின்னு போன் பேசிட்டு இருந்தேன். அப்ப அங்க வந்த அறிவு, ரஜினி சாருக்கிட்ட காட்சியை பற்றி சொல்லிட்டு இருந்தான். போன்பேசிட்டு நான் வந்ததும், ‘நீங்கதான் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தீங்கனு நினைச்சேன்’ என்று தான் குழம்பியதை என்கிட்ட சொல்ல, சுத்தி இருந்தவங்க எல்லாரும் சிரிச்சிட்டாங்க. இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய காமெடிகள் நடக்கும்” என்ற அன்பு தொடர்கிறார்.

” ‘கபாலி’ வாய்ப்பு இரஞ்சித்தால் கிடைச்சதுதான். அதில் ரஜினி சாருடன் ஒர்க் பண்ணினது மறக்க முடியாத அனுபவம். அவரை முதலில் பார்க்கும்போது ரொம்ப பிரம்மிப்பா இருந்துச்சு. கேரவன்குள் ஒரு பைட்டுக்கான சீக்வென்ஸை அவர்ட்டநானும் அறிவும் சொல்லிட்டு இருந்தோம். அமைதியாக கேட்டுட்டு இருந்தவர், ‘ஓகே பண்ண்ணிடலாம்’னு சொன்னார். பிறகு அவர் எழுந்த வேகத்தில் அவர் உட்கார்ந்திருந்த சேர், ஐந்தடிக்கு பின்னாடி போய் நின்னது. அந்தளவுக்கு அவர் ஃபாஸ்ட். அவ்வளவு எனர்ஜியா இருப்பார். கேரவனுக்குள் லுங்கி மட்டும் கட்டிகிட்டு சாதராணமா இருந்தவர், கேரவனைவிட்டு மேக்கப்புடன் வந்து நாங்க சொன்ன அந்தக் காட்சியை ஒரே டேக்ல முடித்தார். கட் கூட சொல்லமால் அவர் ஃபைட் பண்ற சீனை நானும், அறிவும் அப்படியே வாயைப் பிளந்துகிட்டு பார்த்துட்டு இருந்தோம். ‘படையப்பா’ பட டயலாக் மாதிரிதான், ‘வயசனாலும் அவருடைய ஸ்டையில் மாறவே இல்லை. இப்பக்கூட ‘காலா’வில் நாங்க ஒர்க் பண்ணலை. ஆனால் அவரை பார்க்கும்போது ‘கபாலி’யைவிட எனர்ஜியா தெரியுறார். படமும் கபாலியை தாண்டிய படமாத்தான் இருக்கும்-” என்ற அன்புவை ஆமோதிக்கிறார் அறிவ்”நிறைய சண்டை போட்டு நல்லா இருங்க” – என இருவரையும் வாழ்த்திவிட்டு வந்தோம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top