தனுஷை வைத்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய “வேலையில்லா பட்டதாரி” படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தனுஷுக்கு கமர்ஷியல் பிரேக் கொடுத்ததால் இந்தப்படத்தின் இரண்டாம்பாகத்தில் நடிக்க முடிவு செய்த தனுஷ், அதற்கான கதையை தயார் செய்யும்படி தன்னுடைய குழுவினரிடம் தெரிவித்தார். அதன்படி உருவாக்கப்பட்ட “வேலையில்லா பட்டதாரி-2” படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் “வேலையில்லா பட்டதாரி-2” படத்தின் ஷூட்டிங் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து மும்பை உட்பட பல இடங்களில் நடந்து வருகிறது. தனுஷ், அமலாபால் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அதாவது தனுஷுக்கு தொழில் போட்டியாளராக… வில்லியாக நடிக்கிறார். சென்னையை அடுத்த படப்பையில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்பட்டுவரும் இடங்களில் கஜோல் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்தது. தற்போது படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதை தொடர்ந்து விஐபி-2 படக்குழுவினரிடமிருந்து விடை பெற்றார் கஜோல்! “கலைப்புலி” எஸ்.தாணுவின் “வி.கிரியேஷன்” நிறுவனமும், தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்ஸ்” நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. அதாவது ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தனுஷ் படத்தை எடுத்து தாணுவிடம் கொடுக்க, அதை அவர் வியாபாரம் செய்து வெளியிட உள்ளார்.