கபாலி படம் வெற்றிகரமாக 100 நாட்களைத் தாண்டி ஓடிய நிலையில், வேண்டுமென்றே பணம் கேட்டு சில இடைத் தரகர்கள் ப்ளாக்மெயில் செய்வதாக தயாரிப்பாளர் தாணு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடித்த கபாலி படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது. உலக அளவில் பெரும் வசூல் சாதனைப் படைத்த இந்தியப் படம் எனக் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தின் வசூல் சாதனை குறித்து பேசாத, எழுதாத ஊடகமே இல்லை எனும் அளவுக்கு பெரிய வெற்றிப் படமாகத் திகழ்ந்தது. இந்த நிலையில் திருச்சி பகுதியில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் சிலர், இந்தப் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

தங்களுக்கு கலைப்புலி தாணு சில வாக்குறுதிகள் கொடுத்ததாகவும் கூறி வருகின்றனர். இதுகுறித்து கலைப்புலி தாணு தரப்பில் நாம் விசாரித்தோம். இதில் தெரிய வந்த விஷயங்கள் இவை… திருச்சி பகுதியில் படத்தை வெளியிட்டு, இப்போது பணம் கேட்பவர்கள் யாரென்றே தனக்குத் தெரியாது என தாணு தரப்பு கூறுகிறது.

கபாலி படத்தை தாணு இவர்களுக்கு விற்கவே இல்லையாம். இவர்களிடமிருந்து அவர் பணம் வாங்கவும் இல்லையாம்.

“கபாலி படம் வெற்றிகரமாக 150 நாட்களைத் தாண்டிய பிறகு நஷ்டம் என்று கூறிப் பணம் கேட்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? சினிமா தொழிலே ஆபத்தானதாக, எந்த உத்தரவாதமும் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இனி இந்தத் தொழிலை எப்படி நம்பிக்கையுடன் தொடர்வது என்றே தெரியவில்லை. இது வியாபாரமல்ல. மிரட்டல்.. ப்ளாக்மெயில்… பொய்யாக எதையாவது மீடியாவில் சொல்லி பரபரப்புக் கிளப்புவதுதான் இவர்களின் நோக்கம். இதற்கெல்லாம் பின்னணியில், லிங்கா படத்தை விநியோகித்த ஒருவர் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது…” என்று தாணுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

திருச்சி பகுதியில் கபாலியை வெளியிடும் உரிமையை தாணுவிடமிருந்து பெற்றவர் பிரான்சிஸ். முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன். இவரிடமிருந்து படத்தை வாங்கியவர்கள்தான் இப்போது நஷ்டக் கணக்கு காட்டுபவர்கள். 7 கோடிக்கு படத்தை வாங்கிய பிரான்சிஸ் அதை 9 கோடிக்கு விற்றுள்ளார். சமீபத்தில் நடந்த பிரான்சிஸ் தயாரித்த படமான மியாய் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தாணுதான் சிறப்பு விருந்தினர் என்பது கூடுதல் தகவல்.