Tamil Cinema News | சினிமா செய்திகள்
சவுதி அரேபியாவில் காலா படைத்த சாதனை… எந்த இந்திய படத்துக்கும் கிடைக்காதது
சவுதி அரேபியாவில் காலா படைத்த சாதனை:
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலா. இப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாகவும், ஹூமா குரோஷி, ஈஸ்வரி ராவ் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தை ஏற்று இருக்கிறார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஹிட் அடித்துள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
கபாலி படத்தை போல இப்படத்திலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமையை அரசியல்வாதிகளிடம் இருந்து பெற்று தரும் தலைவனின் கதையே காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ரம்ஜான் வீக் எண்டைக் குறி வைத்து காலா படம் இன்று (ஜூன் 7ம் தேதி) வெளியாகியுள்ளது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
அரசியல் எண்ட்ரி கொடுத்திருக்கும் ரஜினிகாந்த் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இதனால், காலா படத்துக்கு அங்கு எதிர்பார்ப்பு கிளம்பும் என முடிவு செய்த தயாரிப்பாளர் தனுஷ் படத்தை சட்டமன்ற தேர்தல் முடிந்து வெளியிட்டால் வசூலுக்கு பாதிப்பு குறையும் என திட்டமிட்டார். ஆனால் அவர் கணக்கு பொய்யாகி விட்டது. காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து படத்தை வெளியிட கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற தயாரிப்பு நிறுவனம், போலீஸ் பாதுகாப்புடன் காலாவை கர்நாடகாவில் ரிலீஸ் செய்துள்ளது. ஆனால், தியேட்டர்கள் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது.
இந்தநிலையில், காலா படம் சவுதி அரேபியாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அங்கு வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைத் தனதாக்கியுள்ளது காலா. மன்னராட்சி முறை கடைபிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் கடந்த 1970ம் ஆண்டு முதல் திரைப்படங்களை வெளியிடத் தடை அமலில் இருக்கிறது. இந்த தடையை சமீபத்தில் மன்னராகப் பதவியேற்ற சல்மான், உடைத்தெறிந்தார். இஸ்லாமியக் கோட்பாடுகளை மிகத் தீவிரமாகப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் முதன் முறையாகப் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சலுகைகளும் அவரால் கிடைத்திருக்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் முதன்முதலாக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் அங்கு பெண்கள் வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல், தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை அடுத்து, ஹாலிவுட் படமான பிளாக் பேந்தர் படம் அங்கு வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் அங்கு வெளியான முதல் திரைப்படம் இதுதான். இந்தநிலையில்தான், ரஜினி நடித்த காலா படம் இன்று சவுதி அரேபியாவில் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம், சவுதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய திரைப்படம் மற்றும் தமிழ் திரைப்படம் என்ற பெருமைகளைக் காலா படம் பெற்றுள்ளது.
