Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னையின் பிரபல தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை. அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படத்தை திரையிட போவது இல்லை என சென்னையின் இரண்டு திரையரங்குகள் தெரிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலா. இப்படத்தில் மும்பை தாதாவாக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். அவருடன் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹீமா குரோஷி, அரவிந்த் ஆகாஷ் ஆகியோ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சாதாரணமாகவே ரஜினிகாந்த் படம் என்றால் வரவேற்பு கூடுதலாகவே இருக்கும். ரசிகர்கள் போட்டிப் போட்டு கொண்டு படத்திற்காக காத்திருப்பர். படம் வெளியான நாளில் இருந்து பல வாரங்களுக்கு எல்லா காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே இருக்கும்.
இதைபோன்று, எதிர்பார்ப்புகளுடன் வெளியிட்டிற்கு தயாரான காலாவிற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புகள் தான் அதிகமாக நிலவுகிறது. கர்நாடகாவில் காலா படத்தை சி நிறுவனம் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாக சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார். மற்ற திரையரங்குகளில் காலா வெளியாகும் என தெரியவில்லை. இதே நேரத்தில், மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து காலா படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திரவியம் நாடாரை தவறாக காட்டியிருப்பதாகவும், அவர் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாக அவர் தொடரப்பட்ட வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டர் நாளை காலா படத்திற்குப் பதில் ஜூராசிக் வேல்டு படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளது. காலா டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க வேண்டும் என விநியோகஸ்தர் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என திரையரங்க நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், சென்னை உதயம் தியேட்டரிலும் காலா படத்திற்குப் பதிலாக ஜூராசிக் வேர்ல்டு படம் தான் ரிலீசாகிறது. சென்னையின் முக்கிய தியேட்டர்களின் இந்த நடவடிக்கையால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
