Tamil Cinema News | சினிமா செய்திகள்
நார்வே, சுவிஸ் நாடுகளிலும் காலா வெளியீட்டுக்கு தடை.!
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படத்திற்கு கர்நாடகாவை தொடர்ந்து நார்வே, சுவிஸ் நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலா. இப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாகவும், ஹீமா குரோஷி, ஈஸ்வரி ராவ் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தை ஏற்று இருக்கிறார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஹிட் அடித்துள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
கபாலி படத்தை போல இப்படத்திலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமையை அரசியல்வாதிகளிடம் இருந்து பெற்று தரும் தலைவனின் கதையே காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ரம்ஜான் தினத்தை குறி வைத்து ஜூன் 7ந் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
அரசியல் எண்ட்ரி கொடுத்திருக்கும் ரஜினிகாந்த் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இதனால், காலா படத்துக்கு அங்கு எதிர்பார்ப்பு கிளம்பும் என முடிவு செய்த தயாரிப்பாளர் தனுஷ் படத்தை சட்டமன்ற தேர்தல் முடிந்து வெளியிட்டால் வசூலுக்கு பாதிப்பு குறையும் என திட்டமிட்டார். ஆனால் அவர் கணக்கு பொய்யாகி விட்டது.
காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் கர்நாடகா வர்த்தக சபை படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்தது. தமிழ் தயாரிப்பாளர் சங்கம், அச்சபையுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. படத்தின் வெளியீட்டிற்கு மக்களே ஒரு முடிவு எடுக்கட்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில், காலா படத்தின் வெளியீட்டிற்கு சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது உண்மையான தகவலா என்பதை இதுவரை தயாரிப்பாளர் தரப்பு உறுதி செய்யவில்லை. தடைக்கான காரணமும் வெளியாகவில்லை. இன்னும் ரிலீஸுக்கு சில நாட்களே இருக்கும் போது, இந்த பிரச்சனைகள் படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
