Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜோதிகாவின் அடுத்த படத்தில் `ரஜினி’…
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதே, காதலர் சூர்யாவை மணந்துகொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார் ஜோதிகா. அதன்பின்னர் 8 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் வெயிட்டான கம்பேக் கொடுத்த ஜோதிகா, அடுத்தடுத்து நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.
அந்த வரிசையில் நாச்சியார் படம் ஜோதிகாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பின்னர் மொழி படத்தின் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் காற்றின் மொழி படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கிடையில் மல்டி-ஸ்டார் மூவியாகத் தயாராகி வரும் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.
இந்த படத்தில், தனது போர்ஷன்களை முடித்துக் கொடுப்பதில் பிஸியாக இருக்கும் ஜோதிகா, ஜூன் முதல்வாரத்தில் காற்றின் மொழி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் வித்யா பாலன் நடித்த தும்ஹரி சுலு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக உள்ள இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று மனம் திறந்துள்ளார் ஜோ. மேலும், வித்யா பாலனின் அனைத்து படங்களையும் தான் பார்த்துள்ளதாகவும், அவரின் கதாபாத்திரத் தேர்வு தன்னை ஆச்சர்யப்படுத்தியதாகவும் ஜோதிகா பாராட்டித் தள்ளியுள்ளார்.
மற்ற மொழிகளில் நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் ஜோதிகா, தற்போது மலையாளப் படமான மோகன்லால் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மஞ்சு வாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மோகன்லால் படம் மல்லுவுட்டில் ஹிட்டடித்திருக்கிறது. அந்த படத்தில் தீவிர மோகன்லால் ரசிகையாக பின்னிப்பெடலெடுத்திருப்பார் மஞ்சு வாரியார்.
அந்தவகையில் தமிழில் இந்த படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மோகன்லால் படத்தின் கதையை எழுதிய கதாசிரியர் சுரேஷ் வரநாட் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழில் தீவிர ரஜினி ரசிகையாக ஜோதிகா நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு ரஜினி செல்வி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஜோதிகா தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு ஜோதிகா தரப்பிலிருந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
