ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தின் ஹயத்புரா பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

எதிர்பாரா விதமாக நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் நடைபெற்ற இந்த சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் யோனி மக்பூல் கானை என அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும், மற்றவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.