Tamil Cinema News | சினிமா செய்திகள்
அம்மாவின் சேலையில் விருதை பெற்ற ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்ட தேசிய விருது விழாவில் அம்மாவின் புடவையில் மகள் ஜான்வி கபூர் மேடை ஏறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
பிரபல நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்து வந்தார். கடைசியாக தமிழில் விஜயின் நடிப்பில் வெளியான புலி படத்தில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று இருந்தார். படத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. தொடர்ந்து, பாலிவுட்டில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம்மாம்.
அறிமுக இயக்குநர் ரவி உத்யவார் இயக்கி இருந்தார். கணவரின் முதல் மனைவியின் மகளுக்காக அவள் வாழ்வில் நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்கும் தாயின் கதை தான் மாம். ஓன் மேன் ஆர்மியாக படத்தை தூக்கி நிறுத்திய ஸ்ரீதேவிக்கு பாராட்டுகள் குவிந்தது. இதனையடுத்து, சிறந்த நடிகைக்கான 65வது தேசிய விருது ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக, அதற்கு முன்னரே ஸ்ரீதேவி இவ்வுலகை விட்டு சென்று இருந்தார்.
இந்நிலையில், நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவிக்கான விருதை பெற கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த குடும்பத்தின் ஆணி வேர் ஸ்ரீதேவியை இழந்த மூன்று பேரின் முகமும் வாடி இருந்தது. மேடையில் விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் போனி கபூர் கையில் கொடுக்கும்போதும் மகள்கள் கையை பிடித்து விருதில் வைத்து கொண்டது அனைவரையும் ஈர்த்தது.
அதேப்போல், அம்மாவை நினைவுப்படுத்தும் விதமாக மூத்த மகள் ஜான்வி கபூர் அவரின் சேலையை உடுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்புகள் குவிந்து இருக்கிறது. ஸ்ரீதேவியின் செல்ல மகள் ஜான்வி கபூர் இன்னும் தன் தாயை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதை இந்த நிகழ்வே வெளிப்படுத்தி விட்டது.
