கப்பல்ல பொண்ணு வந்தாலே எனக்கு ரெண்டு, எங்க சித்தப்பனுக்கு ஒண்ணு என்று கேட்கும் உலகம் இது. ஆனால் சர்வதேச கடல் எல்லையில் ஒரு கப்பலில் இருபதாயிரம் கோடி இந்திய பணம் அநாதையாக மிதப்பதாக கிடைத்திருக்கும் தகவல் மத்திய வெளியுறவுத் துறையை நிமிர்ந்து நோக்க வைத்திருக்கிறது.

எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத சர்வதேச கடல் பரப்பு என்று ஒரு பகுதி இருக்கிறது. ‘இயற்கை அனைவருக்கும் சமமானதே’ என்பதை அலையடித்து சொல்லும் பகுதி இது. இங்கே பல நாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியாக பயணிக்கும் கப்பல்கள் சற்று ஓய்வெடுத்து தேவைப்படுகின்றன பராமரிப்பு பணிகளை அவ்வப்போது பார்ப்பது வழக்கம். அந்த வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கப்பல்கள் கணிசமான நாட்கள் இந்த பரப்பில் நிற்பதும் சகஜம்.

ஆனால் இந்திய அடையாளத்துடன் கூடிய ஒரு சிறு கப்பலொன்று சந்தேகத்து இடமளிக்காத வகையிலான நாட்களை தாண்டி இந்த பரப்பில் மிதந்து கொண்டிருக்கிறதாம். சர்வதேச கடற்பரப்பை கண்காணிக்கும் கூட்டு ரோந்து குழு, சமீபத்தில் இந்த கப்பலில் ஏறி உள்ளே சென்று விசாரித்தபோது பத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலான நபர்களே இருந்திருக்கிறார்களென்றும், அவர்களும் கப்பல் பராமரிப்புக்காக ஒப்பந்த அடிப்படையில் பல தேசங்களில் இருந்து வந்தவர்களென்றும் தெரிந்ததாம்.

கார்கோ பகுதியில் சென்று சோதனையிட்ட ரோந்துக்குழு அங்கே பல பெட்டிகளில் இந்திய பணம் இருப்பதை கண்டறிந்ததாம். பெட்டிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் சுமார் இருபதாயிரம் கோடியை தொடும் என்று மத்திய வெளியுறவுத்துறைக்கு தகவல். இதை கேள்விப்பட்டு இந்திய அதிகாரிகளும் உடனடியாக களமிறங்கி அது வந்திருக்க வாய்ப்புடைய சாத்தியக்கூறுகள், இதன் உரிமையாளர்கள் யார்? என்பதையெல்லாம் ஆராய்ந்திருக்கிறார்கள்.

அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் அது தமிழகத்தை சேர்ந்த அதிகார மையம் ஒன்றின் பணம் என்று தகவலாம். அந்த பணத்தாள்களில் உள்ள வரிசை எண்களை வைத்து, அதை கைாண்ட வங்கிகளை ரிசர்வ் வங்கியின் வழியாக கண்டறிந்ததாம் வெளியுறவுத்துறை.

தேசமெங்கும் மில்லியனும், பில்லியனுமாய் சொத்தை சேர்த்து வைத்தும் அதை நெடுங்காலம் அனுபவிக்க முடியாமல் போன ‘தோழிகளின்’ சொத்துதான் சர்வதேச எல்லையில் இப்படி மிதக்கிறது என்று வெளியுறவுத்துறை வட்டாரம் சன்னமான குரலில் புதிர் போட்டிருக்கிறது.

இது என்னதான் நமது உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் சர்வதேச பரப்பில் பல நாடுகளின் உளவுக்கண்கள் இதை உற்று நோக்குவதால் மிக பக்குவமாக விஷயத்தை கையாள்கிறதாம் வெளியுறவுத்துறை.

ஆனால்  இந்த தகவல்கள் அனைத்துமே உறுதியற்றவையாகதான் உள்ளன. இந்த நொடி வரை இது குறித்து ஒரு வார்த்தை கூட அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ‘அத்தனையும் வதந்தி’ என்று ஒரே நொடியில் முடித்து மூட்டை கட்டிவிட கூட வாய்ப்பிருக்கிறது.

இருந்தாலும்! என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா.  கடலையும் விட்டு வைக்கலையா?