Connect with us
boomerang-movie

ஜெயலலிதா மரணம், வர்தா புயல் இடையே நாம் மறந்த 5 விஷயங்கள்!

5 things forgot

ஜெயலலிதா மரணம், வர்தா புயல் இடையே நாம் மறந்த 5 விஷயங்கள்!

ஜெயலலிதா

பொதுவாகவே நம்மிடம் உள்ள ஒரு மோசமான பழக்கம் மறதி. சமூகத்தில் நடக்கும் எல்லாவிதமான விதிமீறல்களும், குற்றங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடித்தட்டு மக்களையே பாதிக்கும்.  ஆனால், இந்த மக்கள் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் மிகப்பெரிய துரோகம் என்றால் அது சமூக மறதிதான். சமூகத்தில் ஒரு விஷயம் நிகழ்ந்ததும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்போம், சமூக வலைதளங்களில் பக்கம்பக்கமாக கருத்துகளைப் பகிர்வோம். ஆனால், இவையெல்லாம் அடுத்த ஒரு முக்கியமான விஷயம் நடக்கும்வரைதான். இன்று சமூகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களும் பகிரப்படுவது அல்லது விவாதிக்கப்படுவது பெரும்பாலும் சமூக வலைதளங்களில்தான் என்றாகி விட்டது. நமது வலைதள போராளிகள், மிகப்பெரிதாக புதிய சம்பவம் நிகழ்ந்து விட்டால், பழைய விஷயங்களை தடாலடியாக அப்படியே விட்டுவிட்டோ அல்லது மறதி காரணமாகவோ, புதிய விஷயங்களுக்கு கருத்துச்சொல்ல கிளம்பி விடுகின்றனர். இந்த மாதம் அதிகமாக மக்களிடையே பேசப்பட்ட விஷயம் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள், வர்தா புயல். இந்த இரண்டு சம்பவங்களும் ஏற்படுத்திய பாதிப்புகளால், நாம் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகியிருந்த சில சம்பவங்களை மறந்து விட்டோம். அப்படி மறந்த சில விஷயங்கள் எவை எனப் பார்ப்போம்:

என்னவானது தமிழக உள்ளாட்சித் தேர்தல்?

அக்டோபர் மாதம் 17, 19-ம் தேதிகளுக்குள் தமிழக உள்ளாட்ச்சி தேர்தல் நடத்தப்பட இருந்தது. தேர்தல் விதிகள் மீறப்பட்டு உள்ளதாக தி.மு.க சார்பாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலை, இடைக்கால ரத்து செய்து  சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.  டிசம்பர் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஆனால், அவ்வாறு செய்ய இயலாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது. தி.மு.க வழக்கு தொடர்ந்ததில் இருந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைவரை, அமெரிக்க அதிபர் தேர்தலை மேற்கோள்காட்டி முகநூல் பக்கங்களில் பல்வேறு அதிரும் கருத்துகளை வெளியிட்டவர்கள்தான், இப்போது அதனை மறந்து விட்டு, சைலன்டாக வர்தா புயலைப் பற்றிய மீம்ஸ்களுக்கு லைக் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கு:

“நம்மை நல்லவர் என்று மற்றவர்கள் பாராட்டுவது இரண்டு தருணத்தில் தான், நம்மிடம் இருந்து அவர்களுக்கு ஏதேனும் தேவைப்படும்போது மற்றும் நாம் மரணித்தவுடன்” இப்படி ஒரு கருத்து ஆங்கிலத்தில் சொல்லப்படுவது உண்டு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திறமையும், தைரியமும் சந்தேகத்துக்கு  அப்பாற்பட்டவையே. ஆனால் அவர் சொத்துக்குவிப்பு  வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து, அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து விளாசித் தள்ளிய அதே நெட்டிசன்கள், இப்போது அவரின் மரணத்துக்குப் பிறகு ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாட்டை ‘ரிப்பீட் மோடில்’ போட்டு கேட்டுக் கொண்டு, ‘feeling sad’ என்று சோக எமோசன்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் அல்-கொய்தா :

நவம்பர் 29-ம் தேதி மதுரையில், சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த 3 தீவிரவாதிகளை தேசிய புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.  இவர்கள், மைசூரு, நெல்லூர், மலப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதால், மிகுந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. கைதானவர்கள் அனைவரும் 30 வயதைத் தாண்டாத இளைஞர்கள் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பலதரப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் கூறப்பட்டன. இளைஞர்கள் எவ்வாறு இப்படி நாசகார செயல்களில் வழி தவறிப் போகிறார்கள் என்று விவாதம் செய்தவர்கள், இன்று தீவிரவாதத்தையும், தீவிரவாதச் செயல்களையும் மறந்து விட்டு, அ.தி.மு.க வின் அடுத்த தலைமை யார் என்பது பற்றி விவாதம் செய்யக் கிளம்பி விட்டனர்.

லண்டனுக்குத் தப்பி ஓடிய விஜய் மல்லையா :

கடந்த ஆண்டு அதிகம் விமர்சிக்கப்பட்டவர், இந்திய மக்கள் அனைவராலும் வசை பாடப்பட்டவர்களின் பட்டியலில் முதல் இடம் ‘கிங் பிஷர்’ நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவிற்கே. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லையா, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி லண்டன் தப்பியோடினார். அவரின் சொத்துகளை முடக்கி அவரை இந்தியாவுக்கு வரவழைக்க, மத்திய அரசு எவ்வளவு முயற்சித்தும் அதற்கான பலன் இல்லை. நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த சில நாட்களிலேயே வங்கிகளில் மல்லையா வாங்கியிருந்த கடன் தொகையில் பெருமளவு தொகை உள்பட பலரது பெருங்கடன்களை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவித்தது. கடைசியாக, நவம்பர் 21-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால், தாங்கள் ஏ.டி.எம் வாசலில் கால்கடுக்க நிற்கும் சமயத்தில் மல்லையாவின் கடன்தொகையில் பெரும்பங்கு வாராக்கடனாக ரத்து செய்யப்பட்டது மக்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது அரசையும், பிரதமரையும் விமர்சித்து கருத்துகள் வெடித்தன. வெடித்த கருத்துகள் அனைத்தும் வர்தா புயலின் கோரத் தாண்டவத்தைத் தொடர்ந்து, நமத்துப் போய் விட்டன.

ரூ 600 கோடியில் ஆடம்பரத் திருமணம் : 

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏ.டி.எம் மையங்களில் மக்கள் 2,000 ரூபாய்க்காகவும், வங்கிகளில் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும் காத்திருக்கும் நேரத்தில்,கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகள் திருமணத்தை, பெங்களுருவில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல 600 கோடி ரூபாயில் நடத்தி முடித்தார். ரூபாய் நோட்டு பிரச்னையில் மிகவும் ஆதங்கத்தில் இருந்த மக்களுக்கு, இந்த ஆடம்பரத் திருமணம் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

LED திரையுடன்கூடிய அழைப்பிதழ், 30 ஏக்கர் நிலத்தில் அரண்மனை  செட்டப்பில் திருமணம், 5,000 முக்கிய விருந்தாளிகள் என்று ஒரு மெகா சைஸ் திருமணமாக அது நடந்து முடிந்தது. பி.ஜேபி-யைச் சேர்ந்த ஒரு மாஜி மந்திரி வீட்டுத் திருமணம் இவ்வளவு ஆடம்பரமாக நடைபெற்றது எப்படி? என்ற கேள்விகளுடன் ஏராளமானோர் வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
“இந்த ஜனார்த்தன ரெட்டி யார் தெரியுமா? சுரங்க ஊழலில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பாவுடன் சிறை சென்று வந்தவர்” என்றெல்லாம் பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டவர்கள் இப்போது தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களிடம் ஏன் இப்படி? என்று கேட்டால் ‘இதெல்லாம் என்ன பெருமையா ? கடமை’ என்று நமக்கு ஒரு மீம்ஸை தட்டுவார்கள்.

பாவப்பட்ட சாமான்ய இந்திய குடிமகன் மறக்க வேண்டியது மறதியைத் தான். அதுவரையில் ஊழல்வாதிகள், கறுப்புப் பண பெருச்சாளிகள், சமூக விரோதிகள் நம் மறதியில் குளிர் காய்ந்து கொண்டிருக்கத்தான் செய்வார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top