சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் அணிதிரண்டு வருவதால் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
சென்னை மெரீனா போராட்டத்திற்காக குவிந்த மாணவர்கள் மீதும், சோழிங்கநல்லூரில் பேரணியாகக் குவிந்த மாணவர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர். இவ்விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட மறுத்து விட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளது. இந்தத் தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தொடர்பாக சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மெரீனாவில்…:

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
சென்னை மெரீனா கடற்கரையில் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமையன்று (ஜன.17) 2,000 இளைஞர்கள் திரண்டு போராட்டத்தைத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல மெரீனா கடற்கரையில் கூட்டம் அதிகரித்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொட்டும் பனியிலும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.
அமைச்சர்கள் பேச்சுவார்த்தை:

இதைத் தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் ஆகியோர் மெரீனாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களில் சிலரை அழைத்து பட்டினப்பாக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர்கள் தெவித்தனர். எனினும் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை.


தீவிரம் அடைந்த போராட்டம்:

இதையடுத்து புதன்கிழமை காலை முதல் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், அரசு-தனியார் செவிலிய மாணவிகள், தனியார் கல்லூரி மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் மெரீனா கடற்கரையில் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல மாணவர்கள், இளைஞர்களின் வருகை அதிகரித்ததால் மெரீனாவில் உள்ள காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பீட்டாவுக்கு எதிராக….:

“”மாடு எங்கள் மகன்; பீட்டாவுக்கு நாங்கள் எமன்”, “”ஜல்லிக்கட்டை நடத்துவோம்; தமிழன் பலத்தைக் காட்டுவோம்” போன்ற வீரியம் மிகுந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவிகள் போராட்டக்களத்தில் பேரணி நடத்தினர். இதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மெரீனா உள்புறச் சாலையில் தமிழர் பண்பாட்டை வலியுறுத்தும் “கானா’ பாடல்களைப் பாடி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும்…:

போராட்டக் களத்தின் ஒரே பகுதியில் மட்டுமல்லாமல் காமராஜர் சாலையின் பல பகுதிகளில் திரள் திரளாக மாணவர்கள் குவிந்ததால் போலீஸார் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது எனத் தெரியாமல் திணறினர். எனினும் ஆங்காங்கே கூடியிருந்த இளைஞர் குழுவினரிடம் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போலீஸார் 6 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதேபோன்று தலைமைச் செயலகத்துக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைத்தபோதும், போராட்டக் களத்திலேயே ஒளிவுமறைவின்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறிய இளைஞர்கள் அங்கு செல்ல மறுத்து விட்டனர்.
மாணவர்கள், இல்லத்தரசிகள்: இதையடுத்து பிற்பகல் 2 மணி அளவில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், இல்லத்தரசிகள் அதிகளவில் வரத் தொடங்கினர். அதேபோன்று தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உள்பட 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காளைச் சின்னம், ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட்-களை அணிந்தும், இசை முழக்கம் எழுப்பியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை உள்பட திருவல்லிக்கேணியின் பிரதான சாலைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
என்னென்ன கோரிக்கைகள்?

இதைத் தொடர்ந்து 3 மணி அளவில் விவேகானந்தர் இல்லம் அருகே ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு பீட்டா அமைப்பை கடுமையாக விமர்சித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது பேசிய போராட்டக் குழுவினர், எந்தவித அரசியல், தனிப்பட்ட நபர்களின் தூண்டுதல்கள் இல்லாமல் தமிழர் பண்பாட்டை பாதுகாப்பதற்காக கூடியிருக்கிறோம்.
ஜல்லிக்கட்டை அனுமதிப்பதே தீர்வு:

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் குடியரசு தலைவர், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக அவசர சட்டத்தை இயற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கான பீட்டா அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும்.
போராட்டத்தை திசை திருப்பவும், இந்த பிரமாண்ட இளைஞர்கள் கூட்டத்தை கலைக்க யாரும் முயற்சிக்க வேண்டாம். ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது ஒன்றே எங்களுக்கான தீர்வாகும். இதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்றனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்பட திரையுலகினர், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஒருங்கிணைந்து தண்ணீர் பாக்கெட்டுகள், உணவுப் பொட்டலங்கள் ஆகியவற்றை கலங்கரை விளக்கம் அருகே உள்ள பகுதியில் விநியோகித்தனர்.
மாணவர்கள் மீது போலீஸார் தடியடி:

இரவு 7 மணி அளவில் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் போராட்டக் குழுவினர் இருளில் தவித்தனர். இருப்பினும் டார்ச், செல்லிடப்பேசி வெளிச்சத்தின் மூலம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.


இந்த நிலையில் திடீரென 7.30 மணியளவில் போலீஸார் காமராஜர் சாலையில் கூடியிருந்த மாணவர்கள்-இளைஞர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் போலீஸாரின் கோரிக்கையை ஏற்க மறுத்த அவர்கள் போலீஸாரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் மாணவர்களை விரட்டிச் சென்று லத்தியால் தாக்கினர். இந்தச் சம்பவத்தால் காயமடைந்த இளைஞர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மெரீனா கடற்கரை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், இளைஞர்கள் நுழைவதை தடுக்கும் வகையிலும் பல வாகனங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸாரின் தடியடி குறித்து விசாரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தப்பட்டதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸாரைத் தாக்கினர் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூரில்…:

இதே போன்று சென்னை அருகே சோழிங்கநல்லூரில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் காரப்பாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் சந்திப்பை நோக்கி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதன்கிழமை பேரணி சென்றனர். மாணவர்களின் பேரணி போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
போராட்டம் தொடரும்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமை (ஜன.18) இரவு போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:

“”முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியைச் சந்தித்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு அவசரச் சட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்துப் போவதாகக் கூறினர். எனினும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.