தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த பொங்கலன்று மதுரை அலங்காநல்லூரில் போராட்டம் ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து, சென்னை மெரீனா உள்ளிட்ட உலகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டங்கள் மத்திய, மாநில அரசுகளை அடிபணியவைத்து, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர வழிவகுத்தது. மேலும், உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு ஒரு வார காலம் தள்ளிவைக்க வேண்டும் எனவும் மனு அளித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டம் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்காக கொண்டுவரப்பட்ட மசோதா, சட்டமாகியுள்ளது. இது தமிழக அரசின் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின், முறைப்படி ஜல்லிக்கட்டு சட்டம் நடைமுறைக்கு வரும்.

இந்நிலையில், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிராக, இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா, கியூப்பா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவாராய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

காளைகள் துன்புறுத்தப்படுவதால், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் படியும், காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் அடிப்படையிலும், கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியிருப்பதும், 2016ம் ஆண்டு அறிவிக்கை தொடர்பான தீர்ப்பு வரவுள்ள நிலையில், திடீரென அந்த அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கூறியிருப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியே, விலங்குகள் வதைத் தடுப்புச் சட்ட விதிகளை திருத்துவது என்றாலும், சட்டப் பிரிவு 38-ன் கீழ் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, தமிழக அரசு பிரிவு 3(2)ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று நடக்கும் விசாரணையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டம் செல்லுமா? செல்லாதா? என்று தெரியவரும் என கூறப்படுகிறது.