தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தமிழகம் முழுவதும் கலவர பூமியாக மாறி வருகிறது.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் இன்று காலை வெளியேற்றப்பட்டனர்.

இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மெரினா கடற்கரையில் இருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் வலுக்கட்டாய வெளியேற்றப்பட்டதை அறிந்ததும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் லாரன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், அமைதியாக போராடும் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு, நடிகர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த வேண்டும் என அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதால் நல்ல முடிவை தராது.

அலங்காநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை, தமிழக அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை என குறிப்பிட்டுள்ளார்.