தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி தொடர்ந்து 5வது நாளாக தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் பெரும் திரளாக திரண்டு அறவழிப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த போராட்டங்கள் கடந்த பொங்கலன்று ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூரில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையிலுள்ள மெரீனா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று திரண்டு வீரியப்படுத்தத் தொடங்கினர்.

இங்கு நடக்கும் போராட்டம் கடந்த 4 இரவாக எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தின் சுவாரஸ்யம் என்னவென்றால், தலைமை ஏதுமின்றி மாணவர்களின் ஒருமித்த தலைமையில் போராட்டம் நடந்துவருகிறது. இது சேர்த்த கூட்டமல்ல, தானகவே தன்னிச்சையாகவே கூடிய கூட்டம். இன்னும் தொடர்ந்து பன்மடங்கு கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லட்சக்கணக்கான மாணவர்களை உலகளவில் திரும்பிப்பார்க்க வைத்து, மத்திய, மாநில அரசுகளையும் அடிபணிய வைத்தது என்றே சொல்லலாம்.

போராட்டத்தின் வெற்றிக்கு வித்திடும் வகையில், தற்போது விலங்குகள் காட்சிப்படுத்துதல் பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அரசு சட்டத்திருத்தம், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளதை கூறலாம்.

இவ்வாறு எந்தவித அசம்பாவிதமின்றி, தங்களுக்கென வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அறவழியில் இன்றுவரை போராட்டங்களை தொடர்வது உலகத்திற்கே பெரும் எடுத்துக்காட்டாகவும், கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு அசத்தியிருப்பதும், தமிழர்களின் பண்பாட்டை உலகளவில் உயர்த்திருப்பதும் தமிழர்களாகிய நாம் பெருமைப்படவேண்டிய விஷயமே.

மேலும், தமிழர்களின் பண்பாட்டு மற்றும் கலாச்சாரம் உயர்த்த அளவில் காக்கப்படும் என்று பிரதமர் மோடியும் தற்போது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here