அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக விழா குழுவினர் அறிவித்தனர். ஆனால், அவனியாபுரத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஜல்லிக்கட்டு மீது உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த ஆண்டும் தடை நீடித்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்வில்லை.

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சித்தனர் . கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினர் அங்குள்ள வாடிவாசலுக்கு ‘சீல்’ வைத்தனர். இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள், இளைஞர்கள், உள்ளூர் மக்களுடன் கை கோர்த்து வாடிவாசல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைதொடர்ந்து கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் ஜனவரி 17-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் வெடித்தன. மாணவர்களின் போராட்டம் 7 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்ததால் தமிழக அரசு பணிந்தது. இதனால், அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதனையடுத்து, ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அலங்காநல்லூருக்கு முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் சென்றார். ஆனால், ஊர்மக்கள், எதிர்ப்பு தெரிவித்ததால் ஜல்லிக்கட்டை தொடக்கி வைக்காமல் முதல்வர் சென்னை திரும்பினார்.

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கவிடாமல் இருப்பதற்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் உதய குமார் ஆகியோர் மக்களை தூண்டிவிட்டதாக அதிமுகவினர் பேசிக்கொண்டனர். அதன் பிறகு ஊர்மக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு போட்டியை பிப்ரவரி 1ஆம் தேதி நடத்த முடிவு செய்தனர். ஆனால், தற்போது முதல்வரை சந்தித்து பேசிய பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என விழா குழுவினர் அறிவித்தனர்.

இதுகுறித்து விசாரித்தப்போது, சசிகலா முதல்வராக பதவி ஏற்ற பிறகு தான் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வேண்டுமென சசிகலா விரும்பியதால், அதற்கேற்ப இந்த தேதி தள்ளி வைக்கப்பட்டது என்று போயஸ் கார்டனிலிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.