ஜல்லிக்கட்டு வழக்கில் நாளை வெளியாகிறது தீர்ப்பு? தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் தமிழகத்தில் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது அனைத்து தரப்பும் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சார்பாக ஆஜரான பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமியும் தமது வாதத்தை 11 பக்கமாக எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முன்னதாக நடைபெற்ற வாதத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. பசுவிற்கு வலிக்கும் என்பதற்காக பால் கறக்காமலா இருக்கிறோம் என மத்திய அரசு வாதம் முன் வைத்தது. ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு கிடையாது, அது ஒரு திருவிழா என்றும் வாதம் செய்தனர்.

இந்த வழக்கில் நாளை அல்லது நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் என்று சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கோர்ட் உத்தரவு வரும் வரை அவசர சட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

நேற்று மாலை, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனில் மாதேவ் , “தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும் .ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக மத்திய அரசு காத்திருக்கிறது” என கூறிவிட்டார். எனவே அனவைரது எதிர்பார்ப்பும் சுப்ரீம் கோர்ட் மீது உள்ளது. காளையை காட்சி விலங்காக மாற்றிய சட்டத்தில் திருத்தம் செய்யாத நிலையில், உச்சநீதிமன்றம் வாதத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக வழங்குமா என்று தெரியவில்லை.