ஜெய் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் எனக்கு வாய்த்த அடிமைகள். இந்தப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன், பலரையும் ரசிக்க வைத்தாலும், தியேட்டர்களில் கூட்டமில்லை. அதற்கு காரணம் படத்தில் நடித்த ஜெய் இந்தப்படத்திற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதால்தான். அவர் மட்டும் படத்தின் விளம்பரங்களுக்காக நேரம் ஒதுக்கியிருந்தால் படத்தின் ஹீரோயின் பிரணிதாவும் வந்திருப்பார். அவருடன் படத்தில் நடித்த இன்னும் சிலரும் வந்திருப்பார்கள். ஆனால் எல்லாவற்றையும் கெடுத்தவர் ஜெய்தான்.

நான் நடிச்ச படங்களின் விளம்பரங்களில் கலந்து கொள்வதில்லை என்பது என் கொள்கை என்று சொல்லும் ஜெய், நாட்டில் ஒவ்வொருத்தரும் எப்படி கொள்கைக்காக அடித்துக் கொள்கிறார்கள் என்பதை அறியாதவரல்ல. கொள்கை இப்படி கோதுமை பரோட்டா மாதிரி நசுங்கி வரும் நிலையில், ஜெய் தன் பொல்லாத கொள்கையை வைத்துக் கொண்டு புரோட்டாவுக்கு மாவு பிசையக்கூட முடியாது என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. விளைவு? எ.வா.அ பட தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம்.

ஜெய் போட்டோவை வைத்து தினந்தோறும் அதில் எறுக்கம்பூவை தூவிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளரின் வயிற்றெரிச்சலை மேலும் தூண்டும் வித்த்தில் அவருக்கு சம்மந்தமேயில்லாத மகளிர் மட்டும் பட விளம்பரங்களுக்கு நேரத்தை செலவு பண்ணிக் கொண்டிருக்கிறார் ஜெய்.

இந்தப்படத்திற்காக கோடம்பாக்கத்திலிருக்கும் வி.ஐ.பி கள் பலரை தோசை வார்க்க சொல்லி, அதை ட்விட்டர் மற்றும் பேஸ்புக்குகளில் வெளியிட்டு வருகிறது அப்படக்குழு. அதற்காகதான் தோசை வார்த்து தன் வருங்கால மனைவி அஞ்சலிக்கு ஊட்டி மகிழ்ந்திருக்கிறார் ஜெய்.

சே… கொஞ்சமும் மனசாட்சி இல்லாத பிறவி நடிகர்கள்!