விவேகம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் அஜீத் புகைப்படம் உண்மை என்றும், அது கிராபிக்ஸ் இல்லை என்றும் இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு விவேகம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் இதுவரை இல்லாத அளவுக்கு சிக்ஸ் பேக் வைத்து சட்டை போடாமல் உள்ளார்.

அதை பார்த்தவர்களில் சிலர் இது அஜீத் இல்லை எல்லாம் கிராபிக்ஸ் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து சிவா கூறுகையில்,

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கிராபிக்ஸ் இல்லை என்று சத்தியம் செய்கிறேன். சிக்ஸ் பேக் வைக்குமாறு அஜீத் சாரிடம் சொன்னேன். அவரும் உடனே சரி என்று கூறி ஒர்க் அவுட் செய்யத் துவங்கிவிட்டார்.

சிக்ஸ் பேக் வைப்பது சவாலான விஷயம் என்றாலும் அஜீத் சார் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். சிக்ஸ் பேக்கிற்காக அவர் தினமும் 4 முதல் 5 மணிநேரம் ஒர்க் அவுட் செய்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் ஷாட்டை எடுக்கும் முன்பு அவர் 45 நிமிடம் ஸ்பாட்டிலேயே ஒர்க் அவுட் செய்தார். அதனால் தான் அந்த லுக் அருமையாக வந்துள்ளது.

அஜீத்தின் உடம்பு கிராபிக்ஸ் இல்லை. உண்மை தான். அவர் ஒர்க் அவுட் செய்ததன் பலன். படம் வெளியாகும்போது உங்களுக்கே அது தெரியும். வெறுப்பில் உள்ளவர்கள் மீம்ஸ் போடுவதற்கு முன்பு படம் வெளியாகும் வரை காத்திருப்பார்கள் என்று நம்புகிறோம் என சிவா தெரிவித்துள்ளார்.