நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அப்படி ஒரு ஐடியாவை அவருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி கொடுத்துள்ளதாகவும், ஆனால் அரசியல் வேண்டாம் என்று ரஜினியின் நண்பரான நடிகர் அமிதாப் பச்சன் அறிவுரை கூறியுள்ளதாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ரஜினியை கடந்த 20 வருடத்திற்கும் மேலாக பலரும் அரசியலுக்கு இழுத்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் அவர்தான் பெரிய கும்பிடாக போட்டு விட்டு ஒதுங்கி விட்டார். ஆனாலும் அவரை விடுவதாக இல்லை சிலர். அதில் முக்கியமான கட்சி பாஜக. என்னென்னவோ செய்து பார்க்கிறது. ஆனால் ரஜினி அசையாமல் இருக்கிறார். இருந்தாலும் விடாமல் இழுத்துக் கொண்டுதான் உள்ளது பாஜக.

நேரடியாக இழுத்துப் பார்த்து தோல்வி அடைந்த பாஜக தற்போது மறைமுகமாக தனது வேலையை ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள். அதாவது சோ மறைவுக்குப் பின்னர் துக்ளக் ஆசிரியரான குருமூர்த்தி மூலம் ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடக்கிறதாம். அதன்படி புதிய கட்சி தொடங்குமாறு ரஜினிக்கு ஐடியா கொடுத்துள்ளாராம் குருமூர்த்தி. ஆனால் இதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் செய்து விடாதீர்கள் என்று ரஜினிக்கு, அவருடைய நெருங்கிய நண்பரும், இந்தி சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமிதாப்பும் ஒரு காலத்தில் அரசியலில் இருந்தவர்தான். 80களில் காங்கிரஸில் இருந்தார். அலகாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியும் ஆனார். பின்னர் கசப்புணர்வு தோன்றவே சமாஜ்வாடி கட்சிக்கு இடம் பெயர்ந்தார். பிறகு அரசியலை விட்டே விலகி விட்டார்.

ரஜினியும், அமிதாப்பும் சேர்ந்து சில இந்திப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் எந்திரன் படத்தில் இணைந்தும் நடித்துள்ளார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா, குருமூர்த்தி ஐடியா எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும், அமிதாப் அறிவுரையை ரஜினி கேட்பாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.