Rajinikanth-Delay-Airport-Due to Passport-Malysian Flightsகேரள கவர்னர் சதாசிவம் விமான நிலையத்திற்கு 15 நிமிடம் தாமதமாக வந்தார். ஆனால் விமானம் அவருக்காக காத்திருக்காமல் கிளம்பிச் சென்றது. ஆனால் ரஜினிக்காக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 15 நிமிடங்கள் காத்திருந்ததாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

ரஜினிகாந்த் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மலேசியா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனையிடும்போது பாஸ்போர்ட்டை காட்ட வேண்டும். ரஜினியும் தன் கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் பாஸ்போர்ட் இல்லை. “விமானம் புறப்பட நேரம் இருக்கிறது. அதற்குள் பாஸ்போர்டடை கொண்டு வரச்சொல்லுங்கள்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உடனே ரஜினி தன் வீட்டுக்கு தகவல் கூறி பாஸ்போர்ட்டை பைக்கில் எடுத்து வருமாறு கூறினார். அவரின் உதவியாளர் ஒருவர் பைக்கில் ரஜினியின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு விமான நிலைத்தில் ரஜினியிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு 11.45 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 12.15 மணிக்கு அதாவது 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

சர்வதேச விமான போக்குவரத்து ஓழுங்குமுறை சட்டப்படி பயணிகள் விமானம் ஒரு நாட்டின் அதிபர் மற்றும் சில வரையறுக்கப்பட்ட பிரமுகர்கள் தவிர வேறு யாருக்காகவும் காத்திருக்க கூடாது என்பதாகும். அதனால்தான் 15 நிமிடம் தாமதமாக வந்த கேரள கவர்னர் சதாசிவத்தை விட்டு விட்டு விமானம் சென்றது. ஆனால் ரஜினிக்காக 30 நிமிடம் விமானம் காத்திருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆனால் இந்த சர்ச்சையை தவிர்க்கும் வகையில் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், “குறிப்பிட்ட அந்த விமானம் மலேசியாவிலிருந்து காலை 10.15 மணிக்கு வரவேண்டும். ஆனால் 10.30 மணிக்குதான் வந்து சேர்ந்தது. தாமதமாக வந்ததால், தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.