iruti-suttru

கதை 

‘இறுதிச்சுற்று’ மாதவன் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரித்திகாசிங் நடிக்க இவர்களுடன் நாசர், ராதாரவி, மும்தாஸ்சோகர், ஷாகீர்உைஷன் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா பிரசாத் டைரக்ட் செய்த படம் இது. ஒரு சிறந்த குத்துச்சண்டை பயிற்சியாளரான மாதவன், சென்னையின் சாதாரண மீனவ குடும்பத்தை சேர்ந்த ரித்திகாவை மேலதிகாரிகளின் அரசியலுக்கு மத்தியில் ஒரு சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாக்குவதே கதை.

படம் முழுவதும் குத்துச்சண்டையை மையப்படுத்தியதாக இருக்கின்றது. இதில் படத்தின் ஆரம்பம் முதலே மாதவன் (பிரபு மாஸ்டர்) ஒரு அரசியல் அடிப்பணிவற்ற குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கவே, அவரை வசதி குறைந்த சென்னைக்கு இடமாற்றம் செய்கின்றனர். இதனால் பிரபு மாஸ்டர்; சிறந்த குத்துச்சண்டை வீரரை சென்னையில் உருவாக்க நிர்பந்திக்க படுகின்றார்.

சென்னையில் மதி (ரித்திகாசிங்) அறிமுகமாகிறார். இதனுடாக ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான தகுதிகள் மதியிடம் இருப்பதை உணர்கிறார் பிரபு மாஸ்டர். இதனால் தினமும் ஐந்நூறு ரூபாய் கொடுத்து மதியிற்கு குத்து;சண்டை பயிற்சியும் வழங்குகிறார் பிரபு மாஸ்டர்.

இதனால் ஏற்படும் புரிதலால் மதி அவர் மீது காதல் வயப்படுகிறார். இருப்பினும் மாஸ்டர் கதலை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையில் சகோதரி லக்ஸியின் மனதில் பொறாமை உருவாகிறது, இதனால் எற்படும் சதியில் மதி ஒரு முக்கியமான போட்டியில் தோல்வி அடைந்து மாஸ்டரின் வெறுப்புடன் திரும்புகிறாள்.

இதில் மீண்டும் ஒரு உயர் மட்ட அதிகாரியின் சதியால் போலீஸ் நிலையம் செல்லும் மதியை, பிரபு மாஸ்டர் பயிற்றுவித்து தன்னலம் பார்காமல் அவளை சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப்பெறச் செய்வதே மீதி படம்.

விமர்சனம் 

மேடி இஸ் பேக் என தமிழ்நாட்டு ரசிகர்கள் கைத்தட்டி விசிலடிக்கலாம். அதிலும் சாதாரணமான ரீஎண்ட்ரீ இல்லை, பாக்ஸருக்கான உடல்தோற்றம், தன் மனைவி வேறு ஒருவருடன் ஓடி போனதை எண்ணி எப்போதும் கோபமாக இருக்கும் முகம் என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அதிலும் ஜாகிருடன் அவர் பேசும் காட்சியில் எல்லாம் எத்தனை சென்ஸார் என்று கணக்கே இல்லை.

பஞ்சாபி பெண், ரியல் பாக்ஸரை சுதா, வடசென்னை குப்பத்து பெண்ணாக காட்டியுள்ளார். காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கின்றார். மாதவன் சிடு மூஞ்சி என்றால், அதை விட பெரிய கோபக்காரியாக அவருக்கே செம்ம போட்டியாக கலக்குகிறார். பின் மாதவனுடன் ஏற்படும் காதல் அதை அவரிடம் கூறி ‘எனக்கு டர் இல்லை, உனக்கு இன்ன அல்லு’ என்று கூறும் காட்சியெல்லாம் தியேட்டரே அதிர்கிறது.

சிறந்த காட்சி

ஜாகிரின் கதாபாத்திரம், இந்தியாவில் 100 கோடி பேர் இருந்தும் இதுப்போன்ற ஒரு சிலரின் பாலிடிக்ஸால் தான் சிறந்த ஸ்போர்ட்ஸ் பிளேயர்க்ளை உருவாக்க முடியவில்லை என்பதை அழுத்தமாக காட்டுகின்றது. அப்படியே மீறி விளையாட பெண்களை அனுப்பினால், அவர்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு பாலியல் தொந்தரவுக்கு உட்படுவதையும் மிக தைரியமாக நடு மண்டையில் அடித்தது போல் கூறியிருக்கிறார் சுதா

மாதவன் -ரித்திகாவின் கதாபாத்திரம், இருவரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர்.எப்போதும் போதையில் இருக்கும் ரித்திகாவின் தந்தையாக காளி வரும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி தான்.சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்றாலும், பின்னணி இசையில் ருத்ரதாண்டவம் தான்.

 

ரிசல்ட் : சினிமா கமர்ஷியலை நாக் அவுட் செய்து வென்றுள்ளனர்.

RATING: 3.5/5