2 கோடி ரூபாய் மதிப்பிலான சூட் திருட்டு.. அயர்ன் மேன் படக்குழு அதிர்ச்சி

சூப்பர் ஹீரோ கதைகள் என்றாலே உலக அளவில் சினிமா ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்தும் எகிறும். அந்த வகையில் சூப்பர் மேன் தொடங்கி ஸ்பைடர் மேன் வரை ஹாலிவுட் சூப்பர் ஹிரோக்களின் பட்டியல் நீளம். இந்த பட்டியலில் அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு முக்கியமான இடம் உண்டு. அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் திரையில் தோன்றும் இடங்களை உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

மார்வெல் காமிக்ஸின் முக்கியமான படமாக மாறிப்போன அயர்ன் மேன் வரிசையின் முதல் படம் கடந்த 2008-ம் ஆண்டு வெளியானது. ஜோன் பேவ்ரூ இயக்கிய அந்த படம் வெளியான முதல் வாரத்தில் கடுமையான போட்டியைச் சந்தித்தாலும் உலக அளவில் 585 மில்லியன் டாலர்களைத் தாண்டியும் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் பின்னர் தற்போது வரை உலக சினிமா ரசிகர்களால் அயர்ன் மேன் கதாபாத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்வெல் நிறுவனமும் இதன்மூலம் கல்லா கட்டி வருகிறது.

இந்தநிலையில், அயர்ன் மேன் படத்தின் ஒரிஜினர் வெர்ஷனில் பயன்படுத்திய அயர்ன் மேன் சூட் லாஸ் ஏஞ்சலிஸ் நகர வேர் ஹவுஸில் இருந்து திருடப்பட்டிருக்கிறது. இது அயர்ன் மேன் ரசிகர்களை மட்டுமல்ல, படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய லாஸ் ஏஞ்சலிஸ் போலீசின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் நோ, மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வேர் ஹவுஸில் இருந்து அயர்ன் மேன் சூட் மட்டும் திருடப்பட்டுள்ளது.

அந்த வேர் ஹவுஸில் இருந்த மற்ற எந்த பொருட்களும் திருடு போகவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம், இந்த சூட்டைத் திருடிச் சென்றவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். அயர்ன் மேன் படத்தின் ஒரிஜினர் சூட் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் திருடப்பட்டிருக்கலாம். இந்த வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இது உலகம் முழுவதுமுள்ள அயர்ன் மேன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட அயர்ன் மேன் சூட்டின் மதிப்பு 3,25,000 அமெரிக்க டாலர்களாகும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடியே 18 லட்சத்துக்கும் அதிகமாகும்.