பெங்களூர்: அதிகாலை 2 மணிவரை கிரிக்கெட் விளையாட முடியாது என கொல்கத்தாவுக்காக ஐபிஎல் தொடரில் ஆடும், ஆஸி. வீரர் நாதன் கொல்டர்-நைல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

மழை குறுக்கீடு

இதன் பின்னர் 129 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடா்ந்து 3 மணி நேரத்திற்கும் மேல் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12.55-க்கு ஆட்டம் துவங்கியது. இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஐபிஎல் விதிமுறைப்படி, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அதிருப்தி

கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் நாதன் கொல்டர்-நைல் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதிகாலை 2 மணிவரை கிரிக்கெட் விளையாட முடியாது என அவர் கூறியுள்ளார்.

முக்கியமான பவுலிங்

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரான நாதன் கொல்டர்-நைல் கொல்கத்தா வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 4 ஓவர்களில் வெறும் 20 ரன்களைத்தான் அவர் கொடுத்திருந்தார்.

ஓய்வெடுக்க நினைத்தோம்

இன்று ஆட்டம் முடிவடைந்துவிடும் என்றுதான் நினைத்தோம். ஆனால் 12.30 மணிக்கு மேல்தான் இனிமேலும் ஆட வேண்டும் என்ற தகவல் கிடைத்தது. இருப்பினும் நாங்கள் பதற்றமடையவில்லை. இதுபோன்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

வீரர்களும் பாவம்

முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், அணி வீரர்களின் பக்கம் இருந்து பார்க்கும்போதும், இது சரியான நடவடிக்கை இல்லை. 8 மணிக்கு போட்டி ஆரம்பிக்கிறது என்றால், ஹோட்டல்களில் இருந்து வீரர்கள் மாலை 5 மணிக்கே மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களையும் காத்திருக்க வைத்துவிட்டனர் என அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தார்.