முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு மட்டுமே ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்ற பெண்களின் பேறுகால நலத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தை சோதனை முயற்சியாக செயல்படுத்தும்போது, முதல் இரு குழந்தைகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், இப்போது நிதியுதவியை  ஒரு குழந்தையாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது,  ‘இந்திராகாந்தி மதிர்வா சயாக் யோஜனா’திட்டத்தில், பெண்களின் ேபறுகால நிதியுதவி அறிவித்தார். அதன்படி முதல் இரு குழந்தைகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில்  பல்வேறு துறைரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

அது குறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “ கருவுற்று இருக்கும் தாய் அல்லது முதல் குழந்தை பிறந்து பாலூட்டும் தாய்மார்கள், அரசின் உதவித்தொகை ரூ.6 ஆயிரம் பெறலாம்.

இதில் முதலில் ரூ.5 ஆயிரம் என்பது தவணையாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் அளிக்கப்படும். இந்த திட்டம் என்பது முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும்.

சோதனைத் திட்டமாக செயல்படுத்தும்போது, முதல் இரு குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்க ஆலோசிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, கருவுற்ற பெண்கள் தங்கள் பெயரை அரசு மருத்துவமனையில் பதிந்தவுடன் முதல்கட்டமாக ரூ. ஆயிரம் அவரின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.

அதன்பின் 6 மாதம் சென்றபின், ரூ. 2ஆயிரமும், குழந்தை பிறந்தபின் ரூ.2 ஆயிரமும், பி.சி.ஜி., ஓ.பி.வி., டி.பி.டி., மஞ்சள்காமாலை தடுப்பூசி போடும்போது மீதமுள்ள தொகையும் அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் உள்ள விதிமுறையின்படி, நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் தங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு இந்த நிதியுதவியைப் பெறலாம்’’ எனத் தெரிவித்தார்.