சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57-வது படமாக உருவாகிவரும் ”விவேகம்” படத்தின் தலைப்பு, போஸ்டர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் ‘விவேகம்’ படம் மற்றும் அஜித் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல்களை கீழே பார்க்கலாம்.

1. `வேதாளம்’ படத்தின் போது முட்டி மற்றும் தோள்பட்டை காயத்துடன் படப்பிடிப்பை தொடர்ந்த அஜித் வேதாளம் படம் ரிலீசாகும் நேரத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.
2. பொதுவாக அறுவைசிகிச்சை செய்வதால் உடல் எடை அதிகரிக்கும். இந்நிலையில், ‘விவேகம்’ படத்திற்கு தயாரான அஜித் ‘விவேகம்’ பட போஸ்டரில் உள்ளபடி உடல்கட்டமைப்புக்கு வர 7 மாதங்களாக 5 முதல் 6 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை உடல்எடையை குறைத்துள்ளார்.
3. ஆங்கிலத்தில் V என ஆரம்பிக்கும் அஜித்தின் படத்தலைப்புகளில் ‘விவேகம்’ படமும் இணைந்துள்ளது. V என தொடங்கும் அஜித்தின் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக வெளியாக உள்ள ‘விவேகம்’ படமும் V என்ற எழுத்துடன் தொடங்குவது சிறப்பு. `வான்மதி’, `வாலி’, `வில்லன்’, `வரலாறு’, `வீரம்’, `வேதாளம்’ உள்ளிட்டவை V என்ற தொடக்கத்தை உடைய மற்ற அஜித் படங்களாகும்.
4. அஜித்தின் ‘விவேகம்’ படப்பிடிப்பு குறித்த படங்களை ஆஸ்திரிய பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு அஜித்தை, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர்ஸ்டர் ஸ்டாலனுடன் ஒப்பிட்டுள்ளது. அதில் காரின்தியா(காரின்தியா என்பது இடத்தின் பெயர்) படப்பிடிப்பில் இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் என்று குறிப்பிட்டுள்ளது.
5. போஸ்டரின் பர்ஸ்ட் லுக்கில் ‘விவேகம்’ படத்தின் பெயர் ஸ்டாப் வாட்ச் எழுத்துருவில் உள்ளது. எனவே இப்படத்தில் நேரத்திற்கு முக்கிய பங்கு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
6. மேலும் ‘விவேகம்’ தலைப்பை கூர்ந்து நோக்கினால், அது ஒரு போன் நம்பரை வெளிப்படுத்துவதை கவனிக்கலாம். அதாவது, ‘விவேகம்’ என்பது, 9500912610 என்ற எண்ணை குறிப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
7. அஜித்-சிறுத்தை சிவா கூட்டணி மூன்றவது முறையாக ‘விவேகம்’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. `வேதாளம்’ படத்திற்கு பின்னர் சிவா-அஜித்-அனிருத்-ரூபன் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது இங்கே கவனிக்க வேண்டியது.
8. ‘விவேகம்’ படத்தின் மூலம் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் முதன்முறையாக அஜித்துடன் இணைகின்றனர். முன்னதாக சிவா இயக்கத்தில் `வேதாளம்’ படத்தில் ஸ்ருதி ஹாசன் அஜித்துடன் நடித்திருந்தது குறிப்பித்தக்கது.
9. முதற்முறையாக யூசப் என்ற உடற்பயிற்சி இயக்குநரின் பெயர் படத்தின் போஸ்டரில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10. 2010-ல் வெளியான `எந்திரன்’ படத்தில் ஹிட்டான “பூம் பூம் ரோபோ டா” பாடலைப் பாடிய ஹிப் ஹாப் புகழ் யோகி பி ‘விவேகம்’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.
11. `கபாலி’ படத்தை வாங்கிய ஜாஸ் சினிமாஸ் ‘விவேகம்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
12. ‘விவேகம்’ படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு `வாலி’, `பில்லா’, `வில்லன்’, `அட்டகாசம்’, `சிட்டிசன்’, `அசல்’, `வரலாறு'(3 வேடங்கள்) உள்ளிட்ட படங்களில் அஜித் இரு வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
13. அனு வர்தன் ‘விவேகம்’ படத்திற்கு ஆடை வடிவமைத்து கொடுத்திருக்கிறாராம். இயக்குநர் விஷ்ணு வர்தனின் மனைவியான இவர் முன்னதாக `பில்லா’, `ஆரம்பம்’ படங்களுக்கும் ஆடை வடிமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் `பில்லா 2′, `ஏகன்’, `வேதாளம்’ உள்ளிட்ட படங்களுக்கும் அனுவே ஆடை வடிவமைத்திருந்தார். மேலும் இந்தியில் ஷாருக்கான் ஹீரோவாகவும், அஜித் வில்லனாகவும் நடித்து வெளியான `அசோகா’ படத்திற்கும் அனு வர்தனே ஆடை வடிவமைத்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
14. பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் ‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பாக சூர்யாவுடன் இணைந்து `ரத்த சரித்திரம்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் இந்தி, தெலுங்கில் இரு பாகங்களாக வெளியானது. தமிழில் டப் செய்யப்பட்டது.
15. பல்கேரியாவில் உள்ள நு போயேனா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ‘விவேகம்’ என்றாலும், முதல் இந்தியப் படம் என்ற பெயரை ஷாருக்கானின் `தில்வாலே’ படம் பெற்றது. மேலும் `தி எக்ஸ்பேன்டபிள்ஸ் 2′(2012), `தி எக்ஸ்பேன்டபிள்ஸ் 3′(2014), `தி லெஜண்ட் ஆப் ஹெர்குலஸ்'(2014) மற்றும் `லண்டன் ஹேஸ் பாலன்’ உள்ளிட்ட ஹாலிவுட்டின் பிரபலமான படங்கள் இதே ஸ்டூடியோவில் தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
16. அஜித் படங்கள் என்றாலே சண்டைக்காட்சிகள் ரசிக்க வைக்கும் நிலையில் இருக்கும். அதே போல் ‘விவேகம்’ படத்திலும் சண்டைக்காட்சிகள் வாய்ப்பிளக்கும் படி இருக்குமாம். அதில் ஒரு சண்டைக்காட்சி தண்ணீருக்குள் சண்டைபோடும்படி எடுக்கப்பட்டுள்ளதாம். மற்றொரு முக்கிய காட்சியில் டூப் ஏதும் இல்லாமல் 29 அடி உயரத்தில் இருந்து அஜித் குதிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
17. அஜித் படங்களிலேயே ‘விவேகம்’ படமே அதிக பொருட்செலவில் சுமார் ரூ.100 கோடியை தாண்டி தயாராகி வருகிறது.
18. ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பொதுவாக அஜித் தான் நடிக்கும் படங்களை வியாழக்கிழமை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல், சிறுத்தை சிவாவும் தனது 3 படங்களையும் வியாழன் அன்றே ரிலீஸ் செய்வதை செண்டிமெண்டாக வைத்திருக்கிறார். ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால் படத்தை ஒருநாள் முன்னதாக வியாழன் அன்று ஜுன் 22-ம் தேதியே ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜுன் 22-ஆம் தேதி, சினிமாவில் அஜித்தின் சக போட்டியாளராக கருதப்படும் விஜய்யின் பிறந்தநாள் ஆகும். ஆகவே, அன்றைய தேதியில் படம் ரிலீஸ் ஆனால் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பெரிய கொண்டாட்ட நாளாக அது மாறும் என்பது மட்டும் உண்மை.