சுற்றிலும் கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ள புதிய வகை ரயில் பெட்டியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கண்ணாடி ரயில் பெட்டியானது, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை,ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ரயில் பெட்டியில் 360 டிகிரி அளவுக்கு சுற்றும் 40 இருக்கைகள், கண்ணாடி மேற்கூரை, ஏ.சி , ஜி.பி.எஸ், தானியங்கி கதவுகள், எல்.ஈ.டி விளக்குகள் ஆகியவை அமைந்துள்ளன. விசாகப்பட்டினம்-கிரண்டூர் ரயில் பாதையில், அரக்கு மலைப்பகுதி அமைந்துள்ளது. எனவே இந்த கண்ணாடி பெட்டி மூலம், அந்த மலைப்பகுதியின் அழகை பயணிகள் ரயிலில் அமர்ந்தவாரே கண்டு ரசிக்க முடியும். இந்த பெட்டியை உருவாக்க சுமார் 3.38 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

சுற்றுலா தளங்களை இணைக்கக் கூடிய ரயில் சேவைகளில், இது போன்ற கண்ணாடி பெட்டிகளை இணைப்பது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.