fbpx
Connect with us

Cinemapettai

பழங்கால பாறை ஓவியங்கள்.! என்ன ஒரு அதிசயம் ஆச்சரியம்

history

News | செய்திகள்

பழங்கால பாறை ஓவியங்கள்.! என்ன ஒரு அதிசயம் ஆச்சரியம்

இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றை எடுத்துக் கூறுவதற்கும், தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும், தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மற்றும் அகழாய்வுகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. ஆம் பண்டைய காலத்தின் ஆதிமனிதன் வரைந்த பாறை ஓவியங்கள் அமைந்த பகுதி வெடிவைத்து தகர்க்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

Pasumai India

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தக்கில் அமைந்துள்ளது. இவ்வரலாற்று சின்னம். சுற்றிலும் மலைகள், அருவிகள், கண்ணுக்கெட்டிய வரையில் உள்ள திராட்சைத் தோட்டங்கள், வனவிலங்குகள் என இயற்கை சார்ந்த இடம், இவை தவிர சங்க கால இலக்கியத்திலும், சங்க காலப்புலவர்களால் பாடல்கள் அமையப்பட்ட தலமும் இதுவாகும். அப்படிப்பட்ட இடத்தை வெடிவைத்து அழித்து வருகிறார்கள், இதனை பாதுகாக்க வேண்டிய அரசோ இதற்கு உடந்தையாக இருப்பது தான் வேடிக்கை.

ஓவியங்கள்:

தமிழகத்தில் 1990ம் ஆண்டு பாறை ஓவியங்கள் கண்டறியும் முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது 74 பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. அவற்றுள் தென்ஆற்காடு, வடஆற்காடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகள் ஆகும். சங்க காலத்தில் இனங்கள், குடிகள், ஆவியர், ஓவியர், கள்வர், துளுவர், திரையர், மழவர் என பிரிக்கப்பட்டு அதில் ஓவியர் என்றொரு தமிழ் இனம் இருந்ததாகவும் அது ஓவியக்கலையில் சிறப்புற்றிருந்ததையும் அறிகிறோம். அதன் பின்னர் ராஜராஜசோழன் முதல் கிருஷ்ணதேவராயர் வரை அவர்கள் சார்ந்த கோயிலில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அப்போது பேரரசர்கள், தாம் அமைத்த பெருங்கோயிலுக்குள் சித்திர மாடங்கள் அமைத்தார்கள். சைவ, வைணவ போட்டியில் சித்திரகூடத்தில் இருந்து ஓவியங்களும் மதம் மாறின. அதன் பின்னர் சிற்றரசர்கள் தங்கள் இன்ப வெறிக்கு ஓவியங்கள் படைத்தனர். அதனை ஆங்கிலேயே அரசு அழித்தது. அதில் ஓவியம் அழிந்து போனது. இன்னும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் எஞ்சிய நிலையில் ஓவியங்கள் உள்ளது.

பெருங்கற்கால ஓவியங்கள் மிக எளிமையானவை. முற்றிலும் உருவம் வரையப்படாதவை. பல செய்திகளை மறைமுகமாக உணர்த்துகின்றன. மனிதன் உபயோகித்த பொருட்கள், மேற்கொண்ட செயல்கள், அவனுடன் வாழ்ந்த மிருகங்கள் ஆகியன பற்றி அறிந்து கொள்ள இவ்வொவியங்கள் துணை புரிகின்றன. தென்னிந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா என நான்கு மாநிலங்களிலும் பெருங்கற்கால ஓவியங்கள் உள்ளது. பாறை ஓவியங்களில் நிற்கும் மனிதர்கள், ஓடும் மனிதர்கள், கத்தி, கேடயத்துடன் காணப்படும் வீரர்கள், விலங்குகளின் மீது உள்ள தலைவர்கள், குதிரை சவாரி செய்யும் மனிதர்கள், விலங்குகளை இழுக்கும் மனிதர்கள் ஆகிய உருவங்கள் உள்ளன. கல்திட்டைகளில் காணப்படும் ஓவியங்கள், பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும். கல்திட்டைகளின் உட்புறப் பாறைச்சுவர்களில் பெரும்பாலும் ஓவியங்கள் கிழக்கு நோக்கிய திசையில் உள்ளன. விலங்குகளும் வேட்டை நிகழ்ச்சிகளும் பாறை ஓவியங்களைக் காட்டிலும் கல்திட்டைகளில் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. இவைகளில் உள்ள மனித உருவங்கள் இறந்தவர்களையும், ஈமச்சடங்குகளில் பங்கு பெற்றவர்களையும் குறிப்பிடுகின்றன. காட்டு விலங்குகளால் இறந்துபட்ட ஆடவனுக்கும், பகைவருடன் போரிட்டு இறந்தவனுக்கும் இயற்கையாக இறந்தவனுக்கும் கல்திட்டை அல்லது கல்பதுக்கை ஏற்படுத்தியதுடன் அவனுடைய வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் அடக்கம் செய்து, கல்திட்டையில் ஓவியங்களாக வரைந்துள்ளனர். ஓவியமே கோட்டுருவமாகவும், பின்னர் படைப்புச் சிற்பமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஓவியங்கள் கீறல்கள்:

குத்துக்கல், நெடுங்கல்லில் வரையப்பட்ட ஓவியங்கள் வெயில், மழை போன்ற இயற்கை காரணங்களால் அழிந்து பட்டாலும் கல்திட்டை, கல்பதுக்கை குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் தமிழகத்தில் பல உள்ளன. கீறல் உருவங்கள் உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி, திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் உள்ளிட்ட இடங்களில் காணப்படுகிறது. கற்களில் ஓவியம் வரைந்தது போன்று பானை ஓடுகளிலும் சவச்சின்னங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், நாகரசம் பள்ளியருகே தட்டக்கல் என்ற ஊரில் கானப்பாறையில் பாறை ஓவியங்கள் உள்ளன. நான்கு மனித உருவங்கள் நின்ற, அமர்ந்த, கிடந்த நிலையில் உள்ளன. இறந்த ஆடவனையும், அவனது, உறவினர்களையும் இவ்வொவியங்கள் குறிக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

அழிக்கப்படும் நெய்தல் வாழ்வு:

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் காமயகவுண்டன்பட்டியில் சுருளிமலை அருகில் சங்கிலிக்காடு என்ற குன்றில் படையல் பாறையில் உள்ள ஒரு ஓவியத்தில், ஒரு படகில் ஒரு மனிதன் நிற்கும் தோற்றம் உள்ளது. ஓவியம் வெள்ளை நிறமியால் ஆனது. அதன் அருகே ஒரு காளையின் தலை அழுத்தமான ஓவியமாக உள்ளது. இதன் காலம் கி.பி.1000 ஆக இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதன் அருகாமையில் உள்ள பாறைகளில் கீறல்கள், எல்லைகளை குறிக்கும் எல்லைக்கற்கள் பாறைகளில் ப போன்ற வடிவில் ஆங்காங்கே உள்ளன. மலையும், மலைசார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியில் நெய்தல் நிலத்தின் ஓவியம் வரையப்பட்டிருப்பது விந்தையே. இவ்வளவு பெருமை வாய்ந்த மலையை கல் எடுப்பதற்காக அரசு உரிமம் வழங்கி தற்பொழுது மெல்ல மெல்ல பாறை ஓவியங்களும் பழங்கால சின்னங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

கடலூர் மாவட்டம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் முதன்முதலில் இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்த ஊரின் பழமையான பெயர் முகமது பந்தர். போர்டோ-நோவா என அழைக்கப்பட்டு தற்பொழுது பரங்கிப்பேட்டை என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கும், ஹைதர் அலிக்கும் போர் நடந்துள்ளது. அதனைப்பற்றிய கல்வெட்டு ஒன்று பராமரிப்பின்றி உள்ளது.

வெளிநாடுகளில் சுமார் 100 ஆண்டுகள் ஆன கட்டிடங்களையும், பாலங்களையும் கட்டிக்காத்து வருகிறது. ஆனால் குறிஞ்சி நிலத்தில் நெய்தல் நிலத்தின் பாங்கை ஒலிக்கும் ஓவியம் அழிக்கப்படுவது வேதனைக்குரியது. இவ்வளவு பெருமைவாய்ந்த இடங்களை பாதுகாக்கவோ அல்லது அந்த இடத்தின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் தொல்லியல் துறையால் எச்சரிக்கை பலகையோ அல்லது அந்த இடத்தைப்பற்றி குறிப்போ எதுவும் இல்லை. இந்த இடங்களை பார்வையிட வெளிநாடுகளில் இருந்தும் வரலாற்று ஆய்வாளர்களும் தினந்தோறும் படையெடுத்து வருகிறார்கள். எனவே தொல்லியல்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரலாற்று சின்னம் காக்கப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top