Sports | விளையாட்டு
நியூசிலாந்தை சிதறடித்த சின்ன பையன் ஸ்ரேயாஸ் ஐயர்.. முரட்டு வெற்றி பெற்ற இந்தியா
இந்திய அணி தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் முதல் டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக கப்பில் மற்றும் முன்ரோ(59) களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. அதன் பின்னர் களமிறங்கிய வில்லியம்சன்(51), ராஸ் டெய்லர்(54) ஆகியோரும் தங்கள் பங்குக்கு அதிரடி காட்டினார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் முகமது சமி அதிகபட்சமாக 4 ஓவர்களில் 53 ரன்கள் வாரி வழங்கினார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து மிகப்பெரிய இலக்கை விரட்டிப் பிடிக்க இந்திய அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு லோகேஷ் ராகுல்(56) மற்றும் விராட் கோலி ஜோடி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வீராட்கோலி அவுட்டாக, அதன்பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்.
29 பந்துகளில் 58 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது. சமீப காலமாக இந்திய அணி தொடர்ந்து அன்னிய மண்ணில் வெற்றிகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக ஒரே டி20 போட்டியில் 5 அரை சதங்கள் அடிக்கப்பட்டது இந்த போட்டியில் தான் என்பதும் சாதனையாக கருதப்படுகிறது.
