மும்பை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இந்திய அணி பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது. இத்தொடருக்கு, முதல் 8 இடங்களுக்குள் வரமுடியாத காரணத்தினால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் இத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பு கத்துக்குட்டி அணியாக கருதப்படும் வங்கதேச அணிக்கு சென்றது.

இந்த அசிங்கத்தை துடைக்க, இந்திய அணியின் துணையை வெஸ்ட் இண்டீஸ் அணி நாடியது. அதற்கு தற்போது பலனும் கிடைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் அப்படியே வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள், 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

வரும் ஜூன் 23ல் துவங்கும் இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி, டிரினிடாட்டிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க்கிலும், மூன்றாவது, நான்காவது ஒருநாள் போட்டிகள் ஆண்டிகுவாவிலும், கடைசி மற்றும் டி-20 போட்டிகள் சபினா பார்க் மைதானத்திலும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.