India | இந்தியா
பல கோடிக்கு கொரோனா தடுப்பூசியை வாங்கும் இந்தியா.. ஸ்புட்னிக்-வி மருந்தால் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யா
உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தோற்றால் மக்களின் வாழ்வாதாரம் எல்லாம் நிலைகுலைந்து போனது. இதற்கு ஒரே வழி என்னவென்றால் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான்.
தங்கள் நாட்டு மக்களை கொரோனா பிடியில் இருந்து காப்பாற்றுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு உலக நாடுகளே, கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ரஷ்யாவில் உள்ள கமெலியா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி ஆனது உலகில் முதல் முதலாக கொரோனாவிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி என்ற அறிவிப்பை ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரஷ்யா அரசு வெளியிட்டது.
இந்த தடுப்பூசி மூன்று கட்ட ஆராய்ச்சியை முழுமையாக முடிக்காததால் பல மருத்துவர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் பாதுகாப்பு தன்மையை குறித்த பல்வேறு சந்தேகமும் மருத்துவ ஆராய்ச்சியாளர் மத்தியில் நிலவியது.
இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டு, முதல் தொகுப்பு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 8ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
தற்போது இந்த தடுப்பூசியை இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் மருத்துவ சேவையை ஆற்றி வரும் டாக்டர் ரெட்டி மருத்துவ நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை ரஷ்யா விற்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை பரிசோதனை மற்றும் விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்கும் படி, இந்நிறுவனம் இந்திய மருத்துவ கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவைப் போலவே பிரேசில், சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பெலாரஸ் போன்ற நாடுகளும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியை பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
