பர்மிங்காம்: ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்களைக் குவித்தனர். தவான், ரோஹித் சர்மா, கோஹ்லி, யுவராஜ் என முதல் வரிசை வீரர்கள் அனைவருமே அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் பாண்ட்யா ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி 9.5 ஓவரில் 46 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரோஹித் சர்மா 72 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இந்திய அணி சீராக ரன்குவித்து வந்தது. 68 ரன்கள் எடுத்த நிலையில் தவான் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து கோஹ்லி களமிறங்கினார். இந்திய அணி 33.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது ரோஹித் சர்மா 77, கோஹ்லி 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து குறுக்கிடுவதால் இன்றைய போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

91 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசியிருந்தார் ரோஹித் சர்மா. ரோஹித் அவுட் ஆகும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது.

யுவி- கோஹ்லி ஜோடி அசத்தல்

இதையடுத்து களத்தில் இருந்த கோஹ்லியுடன் யுவராஜ் கை கோர்த்தார். யுவராஜ்சிங் தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோஹ்லி 58 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.

அதைத் தொடர்ந்து கோஹ்லி வெளுத்து வாங்கினார். மறுமுனையில் 29 பந்துகளில் யுவராஜ்சிங் அரைசதத்தைக் கடந்து விளையாடினார். ஆனால் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் யுவி அவுட் ஆனார். அப்போது 46.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை எடுத்திருந்தது.

ஹாட்ரிக் சிக்சர் வெளுத்த ஹர்திக் பாண்ட்யா

யுவி பெவிலியனுகுத் திரும்பிய நிலையில் ஹர்திக் பாண்ட்யா களத்துக்கு வந்தார். கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளை அடுத்தடுத்து சிக்சர்களுக்கு பறக்க விட்டு மிரட்டினார் பாண்ட்யா. 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

அப்போதும் மழை குறுக்கிட்டது. பாகிஸ்தான் வெல்ல 48 ஓவர்களில் 320 ரன்கள் எடுத்தாக வேண்டிய இலக்கு என நிர்ணயித்துள்ளது இந்தியா.