அடல்ட் காமெடி ஜானரில் வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் தமிழ் சினிமா களத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ஹரஹர மகாதேவகி படத்துக்குப் பிறகு சந்தோஷ் பி ஜெயக்குமார் – கௌதம் கார்த்திக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் `இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. படத்தில் யாஷிகா ஆனந்த், வைபவி ஷாண்டில்யா மற்றும் சந்திரிகா ரவி என 3 ஹீரோயின்கள். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் கடுமையான எதிர்ப்புகளையும் இந்த படம் சம்பாதித்துள்ளது என்றே கூறலாம்.

படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த படம் குறித்து பேசிய இயக்குநர், வெளிநாடுகளில் இதுபோன்ற ஜானர்களில் படங்கள் வெளிவருவதுண்டு. அந்தவகையில் இந்த படமும் இங்கு வெளியாகியிருக்கிறது. காமெடி என்ற வகையில் மட்டுமே படத்தைப் பாருங்கள். மெசேஜை எதிர்பார்த்து குடும்பத்துடன் வர வேண்டாம் என்று கூறியிருந்தார். படம் வெளியான பின்னர் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருகிறது. படத்துக்கு எதிராக இயக்குநர்கள் பாரதிராஜா, பொன்வண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

iruttu

பாரதிராஜா கூறுகையில், திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்றார்கள். சில தரம்கெட்ட திரைப்படங்களால் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணன், கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், விமர்சனங்களையும் தாண்டி படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.