டாஸ்மாக் கடைகளைத் தவிர்த்து பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் பீர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெயில் காலத்தில், குளிர்பானங்கள், இளநீர் ஆகியவற்றை மக்கள் அதிகம் உட்கொள்வர். ஆனால், குடிமகன்கள் எப்போதும் பீர் அருந்துவார்கள். தற்போது உச்சநீதிமன்றத்தில் அதிரடி உத்தரவால் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இருந்த இடம் கூட தெரியாமல் காணாமல் போய்விடுகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதி பேக்கரிகளில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், சைவ, ‘பீர்’ என்ற பெயரில், குளிர்பானம் விற்பனைக்கு வந்துள்ளது. இதைப் பார்த்த பலரும், முதலில், ‘பீர்’ என்றே ஒதுக்கி வந்துள்ளனர். இது முற்றிலும் பழச்சாறு என விளக்கம் அளிக்கப்பட்டதால், இப்போது பலரும் விரும்பி அருந்துகின்றனர்.

இது தொடர்பாக பேக்கரி உரிமையாளர் கூறுகையில், தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ள. இதன் காரணமாக குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு குளிர்பானங்களுக்குப் போட்டியாக, உள்ளூர் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன.

இதன்படி, ‘பீர்’ போன்றே, 750 மி.லி., பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பாட்டில் ஒன்று, 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒரிஜினல் பீர் போன்று 5,000, 7,000 மற்றும், 10,000 என, பெயரிட்டு விற்பனைக்கு வந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.