ஆந்திராவில், காதலித்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிச் சென்ற காதலனை பழிவாங்கும் வகையில், அவன் மீது காதலி ஆசிட் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, காதலித்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்டாலோ, காதலை நிராகரித்துவிட்டாலோ ஆண்கள்தான், ஆத்திரத்தில் அந்த பெண்கள் மீது ஆசிட் வீசுவது வழக்கமாகும்.
ஆனால், ஆந்திராவில் நடந்த இந்த சம்பவம் விநோதமாக உள்ளது. குண்டூர் அருகே உள்ள பெடாகாகனி பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (23). அதே பகுதியைச் சேர்ந்த ஹிமா பிந்து (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நெருக்கமாகப் பழகியதோடு, பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வந்தும் உள்ளனர்.

உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என இலியாஸ் உறுதி அளித்ததை நம்பி, பிந்து தன்னையே பறிகொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென இலியாஸ், அவரது பெற்றோர் பார்த்த பெண்ணை சில நாட்கள் முன்பாக, திருமணம் செய்துகொண்டுவிட்டார்.

இதுபற்றி தெரியவந்ததும், பிந்து கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். நேரடியாக இலியாஸ் வீட்டுக்கே சென்று அவர் வாக்குவாதம் செய்துள்ளார். எனினும், இந்த விவரம் முன்பே தெரிந்திருந்தால், திருமணத்தை நிறுத்தியிருக்கலாம் என்றும், இப்போது எதுவும் செய்ய முடியாது என்பதால், மன்னித்து விடும்படி, இலியாஸின் குடும்பத்தினர் கெஞ்சியுள்ளனர்.

வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறிய பிந்து, இலியாஸை இறுதியாக ஒருமுறை சந்தித்துப் பேச விரும்புவதாகக் கூறியுள்ளார். இதன்பேரில், இலியாஸ் அவரை சந்திக்கச் சென்றுள்ளார்.

இருவரும் ஒன்றாகப் பழகியபோது எடுத்த புகைப்படங்கள், பரிசுப்பொருட்கள் அனைத்தையும் பரஸ்பரம் திருப்பிக் கொடுக்கும்படி பிந்து கேட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றையும் இலியாஸ் எடுத்துச் சென்றுள்ளார்.

ஆட்டோவில் சென்ற 2 பேரும், இறுதியாக, பிந்துவின் வீடு அருகில் ஒரு இடத்தில் நின்றபடி பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென பிந்து, ஒளித்துவைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து, இலியாஸ் வாயில் ஊற்றியுள்ளார். இதன்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பிந்துவும் கை, கால்களில் காயமடைந்துள்ளார்.

ஆனால், பிந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இலியாஸின் அலறல் சத்தம் கேட்டு, ஆட்டோ டிரைவர் அங்கு ஓடிவந்து பார்த்து, அதிர்ச்சியடைந்தார். உடனே, இலியாஸின் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இலியாஸின் உறவினர்கள் அவரை குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறக்கும் முன்பாக, தனது சாவுக்கு பிந்துவே காரணம் என்று, இலியாஸ் மரண வாக்குமூலம் கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, பிந்துவை தேடிவருகின்றனர். ஆனால், பிந்து மற்றும் அவரது தந்தை தலைமறைவாகிவிட்டனர்.