மீம் கிரியேட்டர்களை இமைக்கா நொடிகள் திருப்திப்படுத்தும் – பட்டுக்கோட்டை பிரபாகர்

எல்லாரையுமே ட்ரோல் செய்யும் மீம் கிரியேட்டர்களையும் இமைக்கா நொடிகள் படம் திருப்திப்படுத்தும் என வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் நாயகர்களை விட ரியல் நாயகனாக ரசிகர்களிடம் பாராட்டை பெற்றவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஒரே படத்தால் சென்னையில் அமைந்திருந்த டிமாண்டி காலனி பகுதியை பார்த்தே மக்களை பயம் கொள்ள செய்தார். உண்மையாகவே அங்கு பேய் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வகையில், படம் மக்களிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் இரண்டாவது படம் இமைக்கா நொடிகள் என அறிவிக்கப்பட்டது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்தில் அதர்வா முதலில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அப்படத்திற்கு ஏற்படாத எதிர்பார்ப்பு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் உருவாகியது. இவர்களை அனைவரை விட கவனம் ஈர்த்தவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். தமிழில் நடிகராக அறிமுகமாகும் இவருக்கு மிரட்டலான வில்லன் வேடம் என்பது படத்தின் ட்ரைலரிலேயே காட்டப்பட்டு விட்டது. நயனின் அப்பாவி கணவராக கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

imaikka nodikal

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு இன்று நடைபெற்று இருக்கிறது. வழக்கம் போல நயன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருடன் ஹீரோவான அதர்வாவும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மற்ற படக்குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பட்டுக்கோட்டை பிரபாகர், இப்போது எல்லார் கையில் சமூக கணக்குகள், மொபைல்கள் இருப்பதால் எல்லாருமே படத்தை விமர்சிக்க தொடங்கி விட்டனர். படத்தை பார்த்து விட்டு தங்களுக்கு தோன்றுவதை அப்பட்டமாக எழுதி விடுகின்றனர். ட்ரோல், மீம்களால் வறுத்தெடுக்கின்றனர். அவர்களை கூட இப்படம் திருப்திப்படுத்தும். அதனால் இமைக்கா நொடிகளுக்கு யாரும் மீம் போட முடியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படத்தின் வசனகர்த்தாவும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.