விஜய் சம்மதம் தெரிவித்தால், கில்லி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராக இருப்பதாக இயக்குநர் தரணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம், மெகா ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. நான்கு நாட்களுக்கு முன்னர் கில்லி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் கில்லி இரண்டாம் பாகத்தை இயக்க தயாராக இருப்பதாக கில்லி படத்தை இயக்கிய தரணி தெரிவித்துள்ளார்.

“சுவாரஸ்யமான கிளைமேக்ஸ் கொண்ட கில்லி இரண்டாம் பாகத்திற்காக கதையை தயார் செய்துவிட்டேன். விஜய் சார் மட்டும் சம்மதம் தெரிவித்தால், படத்திற்கான வேலைகளை துவங்கி விடுவேன்.” என தரணி தெரிவித்துள்ளார்.

தில்,தூள்,கில்லி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் தரணி , அதன் பின்னர் இயக்கிய குருவி மற்றும் ஒஸ்தி ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இன்றி தரணி தவித்து வருகிறார். ஒருவேளை கில்லி-2 படத்தில் விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்தால், அது அவருடைய வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.