தென்னிந்திய சினிமாவைக் குறிவைக்கும் இலியானா… பாலிவுட் வாய்ப்புக் குறைந்ததால் முடிவு

தென்னிந்திய சினிமாக்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை இலியானா. சமீபகாலமாக பலிவுட் பட வாய்ப்புகள் குறைந்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

ileana
ileana

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா, மும்பையைச் சேர்ந்தவர். கேடி படத்துக்கு முன்னதாகவே, தெலுங்கில் தேவதாஸூ படம் மூலம் அறிமுகமாகி விட்டார். தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமான இலியானா, அறிமுகமான 2006ம் ஆண்டில் மட்டும் தேவதாஸூ, போக்கிரி, கடர்நக், ராக்கி என நான்கு படங்களில் நடித்து விறுவிறுவென முன்னேறினார். இதனால், டோலிவுட் ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக மாறிப்போன இலியானா, அடுத்த 4 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இந்த இடைவெளியில் மற்ற மொழி படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் பதிப்பான நண்பன் படத்திலும் ஹீரோயினாக அவர் நடித்தார். ஷங்கர் இயக்கிய அந்த படத்தில் நடிகர் விஜய்யின் ஜோடியாக அவர் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டடிக்க தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இலியானாவுக்கு இருந்து வந்தது. அவரது ஆசை 2012ம் ஆண்டில் நிறைவேறியது. ரன்பீர் கபூர் நடித்த பர்ஃபி படத்தின் மூலம் பாலிவுட்டில் அவர் அறிமுகமானார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால், பாலிவுட்டின் கவனிக்கப்படும் முகமாக மாறிப்போன இலியானா, இந்திப் படங்களில் கவனம் செலுத்தும் பொருட்டு மும்பையிலேயே தஞ்சமடைந்துவிட்டார். அதற்கேற்ப அவருக்கு அடுத்தடுத்த பாலிவுட் வாய்ப்புகள் வரத்தொடங்கின. 2013ல் பாடா போஸ்டர் நிகலா ஹீரோ, 2014-ல் மென் டேரா ஹீரோ, ஹேப்பி எண்டிங், 2016ல் அக்‌ஷய் குமாருடன் ரஷ்டம், 2017ல் முபாரக்கான், பாட்ஷாஹோ மற்றும் 2018ல் ரெய்ட் ஆகிய படங்களில் நடித்து பிஸியான நடிகையாகிப் போனார். ரெய்ட் படம் இந்தாண்டு தொடக்கத்தில் ரிலீஸான நிலையில், இலியானாவுக்கு வேறு பட வாய்ப்புகள் பாலிவுட்டில் கிடைக்கவில்லை.

Ileana-DCruz

இதனால்,ம் தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்திருக்கிறாராம். குறிப்பாகத் தன்னை வாழவைத்த டோலிவுட்டுக்கு மீண்டும் திரும்ப முடிவெடுத்த அவருக்கு, ரவிதேஜா கைகொடுத்திருக்கிறார். சீனு வைட்லா இயக்கத்தில் அவர் நடிக்கும் அமர் அக்பர் அந்தோணி படத்தின் ஹீரோயினான இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது தென்னிந்திய படங்கள் குறித்து குறைத்து மதிப்பிட்டபடி பேசிவந்த இலியானாவுக்கு, தற்போது அந்த திரையுலகம்தான் வாழ்வு கொடுத்திருக்கிறது. இடையில் காதலர் ஆண்ட்ரூவுடன் நெருக்கம், அதனால், கர்ப்பம் என வதந்திகள் அவரைச் சுழன்றடித்ததால் பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்ததாகக் கூறப்படுகிறது.