இசையமைப்பாளர் இளையராஜா, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான பிரச்சனை கடந்த சில நாட்களாகவே திரையுலகில் மட்டுமல்லாது, ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இளையராஜா, தன் பாடல்களைப் பாடக் கூடாது என எஸ்பிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

திரையுலகத்தில் உள்ள சில இயக்குனர்களே கூட இளையராஜாவை விமர்சித்துப் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்குத்தான் பாடல்களுக்கான ராயல்டி போக வேண்டும் என்று காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் பேசினார்கள். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் முகப்புத்தகத்தில் அதையே எழுதி வந்தார்கள். ஆனால், இளையராஜா தயாரிப்பாளர்களுக்காக முன்னெடுத்துச் சென்ற பல விஷயங்களை அவர்கள் மறந்து போய் பேசினார்கள்.

2015ம் ஆண்டு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா அறிவித்தபின், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் அவர் பேசினார். அப்போது தனக்குச் சேர வேண்டிய ராயல்டி தொகை மட்டும் சுமார் 100 கோடி இருப்பதாகவும், அவை வசூலானால் அதில் பாதித் தொகையான 50 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கமும் அவருடன் சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்கியது.

ஆறு மாதங்களுக்கு முன்பு அப்படிக் கிடைத்த ராயல்டி தொகையான சுமார் 28 லட்ச ரூபாயை இளையராஜா தயாரிப்பளார்களுக்கு அளித்துள்ளார். இது பற்றிய விவரத்தை தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு தெரிவித்து நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

“70 ஆண்டு கால திரையுலக வரலாற்றிலே எம்எஸ்வி, கேவி மகாதேவன், இளையராஜா ஆகியோரின் லட்சக்கணக்கான பாடல்களை விற்பனை செய்து வந்த எச்எம்வி நிறுவனத்தின் மீது நாங்கள் வழக்கு போட்டிருக்கிறோம். அதே போல “எக்கோ” சுப்பிரமணியத்தின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளோம். தயாரிப்பாளர்களுக்குச் சேர வேண்டிய பங்குத் தொகை 50 சதவீதம் என இளையராஜா சார் அறிவிப்பு செய்து, வழக்குத் தொடர்ந்ததற்கான நீதிமன்றக் கட்டணத்தையும் கூட அவர் சொந்தப் பணத்திலேயே செலுத்தியிருக்கிறார்.

அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம், இளையராஜாவும் வெற்றி பெறுவார். அப்படி வெற்றி பெறும் போது அவர் சொன்னபடி சங்கத்துக்கு 50 கோடி தருவார். அது எந்தெந்தத் தயாரிப்பாளர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமோ, போய்ச் சேரும்.

ஆறு மாதங்களுக்கு முன்பு கூட 28 லட்ச ரூபாய் இளையராஜா மூலமாக வசூல் செய்து அதைத் தயாரிப்பாளர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்,” என்றார் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணு.

தயாரிப்பாளர்களுக்காகப் பாதித் தொகை தருவேன் என்று அறிவித்து, அதையும் பெற்றுத் தந்து, தொடர்ந்து ராயல்டி தொகைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் முயற்சிகளைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என தயாரிப்பாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கிறார்கள்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா அனுப்பிய நோட்டீஸை முகப்புத்தகத்தில் போட்டது தவறு. அதே சமயம், அந்தப் பதிவில், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், ராயல்டி தொகை வாங்கித் தருகிறேன் எனச் சொல்லி, அதை வாங்கிக் கொடுத்தால் சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர்களுக்கும் அதன் மூலம் குறிப்பிட்டத் தொகை கிடைத்திருக்கும்.

தயாரிப்பாளர் சங்கமே இளையராஜாவைப் பற்றியும் அவருடைய முயற்சிகளையும் அறிவித்துள்ள நிலையில், அவர் மீது தேவையில்லாத விமர்சனங்களை மற்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இளையராஜா ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.