ஹாலிவுட்டில் கலக்கப்போகும் இளையராஜா.. வியந்து பார்க்கும் இளைய தலைமுறை

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமைக்குரியவர் இளையராஜா. பல வருடங்களாக இசையில் தனித்தன்மையை காட்டிவரும் அவர் இன்றைய தலைமுறைகளுக்கு சவால் விடும் அளவுக்கு பல இன்னிசை பாடல்களை நமக்கு கொடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது ஒரு ஹாலிவுட் வெப் தொடருக்கு இசை அமைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது அமேசான், ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் இந்த ஓடிடி தளங்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், லாபமும் கிடைத்தது. அதன் அடிப்படையில் தற்போது பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் போன்றவை ஓடிடி தளங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

மக்களும் இதற்கான ஆதரவை அதிகமாக கொடுத்து வருவதால் தற்போது ஓடிடி தளங்கள்தான் பல மடங்கு லாபத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஸ்டிரேஞ்சர் திங்ஸ் என்ற ஹாலிவுட் வெப் தொடர் தமிழில் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே வெளியான இந்த தொடரின் மூன்று சீசன்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் 4வது சீசனுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் தமிழ் மற்றும் தெலுங்கு எபிசோடுகளுக்கான டைட்டிலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அது குறித்து வெளியான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் நான்கு சிறுவர்கள் விளையாட செல்கின்றனர் அப்போது அவர்களுக்கு ஒரு இசை கேட்கிறது. அதனால் கவரப்பட்ட அந்த சிறுவர்கள் அந்த இடத்தை நோக்கி செல்கின்றனர்.

அங்கு கடற்கரையின் ஓரம் தன் குழுவுடன் இளையராஜா மெய்மறந்து இயற்கையுடன் ஒன்றி இசையமைத்து வருகிறார். அதை அந்த சிறுவர்கள் மிகவும் வியந்து போய் பார்க்கின்றனர். இந்த வீடியோ தற்போது பலராலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்கள் கடந்த பின்னும் இளைய தலைமுறையினரை வியக்க வைக்கும் அளவுக்கு இசையை கொடுக்கும் இளையராஜாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்