ஐதராபாத்: பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் மாதிரி சிக்சர் அடிக்க முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை என ஐதராபாத் வீரர் வில்லியம்சன் தெரிவித்தார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 21வது லீக் போட்டியில், ஐதராபாத், டெல்லி அணிகள் மோதின.

இதில் ஐதராபாத் அணி, டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஐதராபாத் அணிக்காக தனது முதல் போட்டியில் பங்கேற்றார். இதில் அசத்திய இவர் 89 ரன்கள் விளாசினார்.

இதுகுறித்து வில்லியம்சன் கூறுகையில்,’ முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் போல ஒரு சிக்சராவது அடிக்க வேண்டும் என முயற்சித்தேன், ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை. இதற்காக மணிக்கணக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன்.’ என்றார்.